சட்டக்கல்லூரியை தற்காலிகமாக இடம் மாற்றுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 6, 2015

சட்டக்கல்லூரியை தற்காலிகமாக இடம் மாற்றுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை, இரண்டாக பிரிக்கும் அரசின் நடவடிக்கைக்கு, மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும், ஏழு அரசு கல்லூரிகளில் மிகவும் பழமையானது சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் பணிகளால், கல்லூரி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால், தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு கல்லூரியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

சண்முகம் கமிஷன் பரிந்துரை:

இந்நிலையில், நீதிபதி சண்முகம் கமிஷன் பரிந்துரைப்படி, சென்னை, சட்டக் கல்லூரியைப் பிரித்து, காஞ்சிபுரம் அடுத்த மாம்பாக்கத்திலும், திருவள்ளூரில், பட்டறைபெரும்புதூரிலும், இரண்டு கல்லூரிகள் அமைக்க, அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* நேற்று காலை, உயர் நீதிமன்ற வளாகத்தில் கூடிய மாணவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக, தலைமைச் செயலகம் நோக்கி சென்றனர். ரிசர்வ் வங்கி அருகில் அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, முதல்வரிடம் பேச வைக்க, 10 பேரை அழைத்துச் சென்றனர். ஆனால், முதல்வரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

* சட்டத்துறை கூடுதல் செயலர் வீரமணியை சந்தித்தும் திருப்தி ஏற்படாததால், இறுதியாக தலைமைச் செயலர் ஞானதேசிகனை சந்திக்க, இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

* ஆத்திரமுற்ற மாணவர்களை சமாதானப்படுத்திய போலீசார், பகல் 1:51 மணிக்கு, மாணவர் பஞ்சமூர்த்தி, மாணவி ஸ்வேதா, தலைமைச் செயலர் ஞானதேசிகனை சந்தித்தனர். நான்கு நிமிடங்களில், வெளியே வந்தனர்.

எந்த முடிவும் எடுக்கவில்லை:

அவர்கள் நிருபர்களிடம், ’தலைமைச் செயலரிடம் கோரிக்கையை தெரிவித்த போது, ’தற்போது, பழைய கட்டடத்தில் உள்ள வகுப்புகளை, புதிய கட்டடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரியை மாற்றுவது தொடர்பாக, தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனக் கூறினார்’ என்றனர். தொடர்ந்து, பாரிமுனை சென்ற அவர்கள், மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பாரிமுனை, பூக்கடை, திரு.வி.க., சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரயில் மறியலிலும் ஈடுபட்டதால், பூங்கா - கடற்கரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு:

* மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, கல்வீச்சு நிகழ்ந்ததால், போலீசார் தடியடி நடத்தி, மாணவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதில், முதலாண்டு சட்டப் படிப்பு மாணவர்கள், ராஜேஷ்குமார், ஏழுமலை படுகாயமடைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், சில மாணவர்களும் காயமடைந்தனர்.

* தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி, மீண்டும் மாணவர்கள் மறியல் நடத்த, அவர்களிடம் வட சென்னை இணை கமிஷனர் தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலையச் செய்தார்.

* உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, சட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கூறியதாவது: கடந்த, ஜன., 28ம் தேதியே கல்லூரியை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றம் இதுகுறித்து கேட்டதற்கு, அரசு மாற்ற உள்ளதாக பதிலளித்து உள்ளது. இதனால், சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். கோர்ட்டும், கல்லூரியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

41 பேர் கைது:

சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல் நடத்திய போது, கல்வீச்சு நடந்ததால், போலீசார் தடியடி நடத்தி, 11 மாணவியர் உட்பட, 41 பேரை கைது செய்தனர். அவர்களை, கொண்டித்தோப்பு சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். பின், இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் காயமடைந்த போலீசார், மாணவர்கள் அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment