பட்டதாரி ஆசிரியை இடமாற்றம்: கல்வி அதிகாரி நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 11, 2015

பட்டதாரி ஆசிரியை இடமாற்றம்: கல்வி அதிகாரி நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை

நெல்லையில் உள்ள ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்லையா, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:
எங்கள் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இங்கு, 6–ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை 212 மாணவர்கள் ஆங்கில வழியிலும், 589 மாணவர்கள் தமிழ் வழியிலும் படித்து வருகின்றனர். இதுதவிர, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 9 பாடப்பிரிவுகள் உள்ளன.
2014–2015–ம் கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில் கூடுதலாக ஒரு முதுகலை கணித ஆசிரியர் பணியிடமும், ஒரு முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடமும், 2 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் இருப்பதாக 28.11.2014 அன்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடிதம் அனுப்பினார். இதை எதிர்த்து, கல்வி அதிகாரியிடம் அப்பீல் செய்துள்ளோம்.
இந்த நிலையில் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் எங்கள் பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடம் கூடுதலாக இருப்பதாக கூறி பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சாந்தி என்பவரை பாளையங்கோட்டை குழந்தை ஏசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்து 24.12.2014 அன்று நெல்லை முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
எங்கள் பள்ளியில், பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடம் கூடுதலாக இருப்பதாக முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது, திடீரென்று பட்டதாரி ஆசிரியை சாந்தியை இடமாறுதல் செய்தது நியாயமற்றது. எனவே, அவரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து முதன்மைக்கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை முதன்மைக்கல்வி அதிகாரியின் இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, ஆசிரியை சாந்தியை இட மாறுதல் செய்து நெல்லை முதன்மைக்கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment