முதலாம் ஆண்டு நினைவு நாள்:அப்துல் கலாம் நினைவிடத்தில் 7 அடி உயர சிலை இன்று திறப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

முதலாம் ஆண்டு நினைவு நாள்:அப்துல் கலாம் நினைவிடத்தில் 7 அடி உயர சிலை இன்று திறப்பு

ராமேசுவரம் அருகே உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கல சிலை இன்று திறக்கப்படுகிறது. இந்த விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

முதலாம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை இன்று திறக்கப்படுகிறது.

இதற்காக ஐதராபாத்தில் இருந்து பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வாகனம் மூலம் சிலை கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட்டது.

அடிக்கல் நாட்டுவிழா

இன்று காலை 9 மணியளவில் நினைவிடத்தில் கலாமின் சிலை திறப்பு மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையாநாயுடு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், மத்திய இணை அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ்ராம் ராவ் பாம்ரே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள்

இந்த விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், அன்வர்ராஜா எம்.பி. மற்றும் கலாமின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.

கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று கலாமின் நினைவிடத்திற்கு வருகை தந்த கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதின், மகள் சீமாமரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக்சலீம் உள்ளிட்ட குடும்பத்தினர் கலாமின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிது நேரம் பாத்தியா ஓதி சிறப்பு துஆ பிரார்த்தனை செய்தனர்.

அருங்காட்சியகம்

அதன் பின்பு கலாம் விரும்பி சாப்பிடும் பாசிபருப்பு லட்டு அங்கு நின்றிருந்த ஏராளமானவர்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல் கலாம் வீட்டிலும் மாலை 4 மணியளவில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த் தனைகள் நடைபெற்றன.

இன்று நடைபெறும் சிலை திறப்பு விழாவைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கலாம் நினைவிடத்தில் இளமைப்பருவம் முதல் ஜனாதிபதி பதவி வகித்தது வரையிலும் அவர் செய்த சாதனைகள் மற்றும் அவரது கண்டுபிடிப்புகள், பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment