தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக, பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்து உள்ளனர்.

மாற்றம் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், தமிழ்நாடு போர்சஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முக வேலாயுதம், தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் ஆகியோர் சார்பில், பள்ளிக்கல்வி செயலர் சபிதா, சி.பி.எஸ்.இ., இயக்குனர் சாபு, மண்டல அதிகாரி சீனிவாசன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் மின்வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம் எனக் கூறப்படும் சில பள்ளிகள், எந்த வித சட்ட அனுமதியுமின்றி, பாதுகாப்பான கட்டடமும் இல்லாமல் செயல்படுகின்றன. பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் நாராயணா குழும பள்ளிகள், சென்னையின் பல இடங்களில் துவங்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், பலவித புகார்களை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து, நாங்கள் நேரடி ஆய்வு செய்ததில், சில பள்ளிகள் பாதுகாப்பான கட்டடம் இன்றி, ஆபத்தான நிலையில் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

சென்னையில், அரும்பாக்கம், அம்பத்துார், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் என, 15 இடங்களில், பள்ளி கட்டடங்கள் உள்ளதாக, அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. அவற்றை ஆய்வு செய்ததில், பல இடங்களில், தற்போது தான் கட்டட பணியே நடக்கிறது. ஆனால், பாதுகாப்பற்ற கட்டடத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளி இயங்குகிறது. இது, மாநில அரசின் பள்ளி பாதுகாப்பு விதிமுறைகள், சி.பி.எஸ்.இ., வாரிய விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது.

இந்த குழுமத்தின் சில பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அங்கீகாரமே பெறவில்லை என்பது, சி.பி.எஸ்.இ., இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, மாணவ, மாணவியருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment