சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்”” என்ற பெயரில் அழைக்கப்படும்.
இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்கள், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. மாநிலத்தில் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணாக்கர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணாக்கர்கள் மற்றும் அதிகளவில் மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டிலிருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வளாகம் பார்வையாளர் மாடம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அறை, நிர்வாக அறை, பயிற்சியாளர் அறை, வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறைகள், சேமிப்பு அறை முதலான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பந்தய குளம், பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில், கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்ப அட்டைதாரர் கோரும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விவரம் மேற்படி இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டைதாரரால் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு அவர் பெற்ற பொருட்கள் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியல் தற்போது வழங்கப்படுவதில்லை.
இதை சரி செய்யும் விதமாகவும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரல்ரேகை படிப்பி மற்றும் அச்சுப்பொறி வழங்கப்படும்.
சிறு வணிகர்கள், தனியாரிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000/- ரூபாயிலிருந்து 25,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment