இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில் கடந்த ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.)
மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த வரி விதிப்பு, 5, 12, 18 மற்றும் 28 ஆகிய 4 வகையான சதவீதங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 11 வகையான வரிகள் இதில் அடங்கியுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக சதவீதத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய நிதி மந்திரியை தலைவராகக் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஆய்வு செய்து பல்வேறு திருத்தங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்த போது 27 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்பட்டது.
சப்பாத்தி, ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி மருந்துகள், பிளாஸ்டிக், ரப்பர் காகித கழிவுகள் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி. வரி 28 மற்றும் 18 சதவீதங்களில் இருந்து 5 சதவீதமாக குறைந்தது. தண்ணீர் பம்ப் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு மாநிலங்களின் பரிந்துரையை ஏற்று 60 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. என்றாலும் வியாபாரிகள், சிறு தொழில்கள் செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அதிருப்தி நீங்கவில்லை.
மாதம் தோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு மிகுந்த எதிர்ப்பு ஏற்பட்டது. அனைத்து தரப்பினரின் அதிருப்தியால் இந்தியாவில் சற்று பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு பெரும்பாலான பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து விட்டது.
இதையடுத்து ஆண்டு விற்பனை ரூ. 1.5 கோடி வரை உள்ள நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்குத் தாக்கல் செய்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும் சிறு தொழில் செய்பவர்களிடம் அதிருப்தி நீங்கவில்லை. சில முக்கிய பொருட்களுக்கு 28 சதவீத வரி இருப்பது மிகவும் இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அதிருப்தி தெரிவித்தன. மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. நாடு முழுவதும் இதே மன உணர்வு இருப்பதை அறிந்த மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மீண்டும் முக்கிய மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் 150 முதல் 200 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. எலக்ட்ரிக்கல், கட்டுமானம், பர்னிச்சர் ஆகியவற்றின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட உள்ளது.
18 சதவீதமாக உள்ள பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்படும் என்று தெரிகிறது. 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்று சிறு தொழில் உற்பத்தி பொருட்கள் மீதான வரியும் குறைய உள்ளது. மேலும் வரி கணக்கு தாக்கல் செய்வதை அனைத்து நிறுவனங்களுக்கும் 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும் என்று அறிவிப்பார்கள் என தெரிகிறது.
மேலும் தாமத கட்டணம் தற்போது ரூ.200 ஆக உள்ளது. இதை ரூ.50 ஆக குறைக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கியமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்கள், சேவைகளில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment