மின்வாரிய கள உதவியாளர்கள் பணி: மதிப்பெண் வெளியீடு!மின் வாரியம் நடத்திய, கள உதவியாளர் தேர்வுக்கான
நேர்காணல்மதிப்பெண் விவரம் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக மின்வாரியத்தில், 900 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப, 2016 ஆம் ஆண்டு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் 11 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 3,492 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான நேர்காணல், சென்னை, கோவை, திருச்சி உட்பட, மின் வாரியத்தின், ஒன்பது மண்டலங்களிலும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த நேர்காணல் இன்று வரை நடைபெறவுள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து பேரிடம் நேர்காணல் நடக்கிறது. தேர்வர்களிடம், கம்பம் ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், 20,21 ஆம் தேதி நடந்த நேர்காணலில் பங்கேற்றவர்கள் வாங்கிய மதிப்பெண் பட்டியல் http://www.tangedco.gov.in என்னும் மின் வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர், “மதிப்பெண் விவரம் வெளியிடத் தாமதமானால் தங்களுக்கு வேண்டியவருக்கு வேலைத் தருமாறு அரசியல் குறுக்கீடுகள் வரும் என்பதால் தினமும் நேர்காணல் முடிந்ததும், எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண், கல்வித் தகுதி மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் ஆகிய மூன்றையும், 100 மதிப்பெண்ணுக்குக் கணக்கிட்டு அதில் தேர்வர் வாங்கிய மதிப்பெண் வெளியிடப்படுகிறது. இதேபோல், இன்று (நவம்பர் 22) நேர்காணல் முடிந்ததும், மதிப்பெண் வெளியிடப்படும். இறுதியாக, இன இட மற்றும் தகுதி அடிப்படையில், உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” எனக் கூறினார்.
மின்வாரியத்தில், 12 ஆயிரம் கள உதவியாளர் காலியிடத்துக்கு 900 பேர் மட்டுமே தேர்வு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பணிச்சுமையால் ஊழியர்களுக்கு ஞாபக மறதி, கவன சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், மின் விபத்து நடக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. அதைத் தவிர்க்க கள உதவியாளர்களைக் கூடுதலாக தேர்வு செய்ய வேண்டும் என சங்கங்கள் சார்பில், வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கடந்த வாரம் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க, சேலம் வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment