பாடத்திட்டங்களில் மட்டும் மாற்றம் போதாது!
தேசிய அளவில் கல்வித் தரம், மருத்துவப் பட்டப்படிப்புக்கான
நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட பல்வேறு பின்னடைவுகள் தமிழக மாணவர்கள் மீது சுமத்தப்பட்டன. உடனே தமிழக அரசு பாடத்திட்டத்தை மாற்றி எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என களமிறங்கி அதற்கான பணிகளும் முக்கால் கிணறை தாண்டிவிட்டது.தேசிய அளவில் கல்வித் தரம், மருத்துவப் பட்டப்படிப்புக்கான
+1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிக்கையையும் விட்டு, தேர்வுக்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. எல்லாம் சரிதான்… மாணவர்களின் மனநிலை என்ன? அவர்களின் திறன் என்ன? என்பதையெல்லாம் மதிப்பிட்டார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.
சென்னைப் பல்கலைக்கழகம் (மெட்றாஸ் பல்கலைக்கழகம்) தனது 50 ஆவது ஆண்டு விழாவை 1897-ல் நடத்தியது. அதில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றினார். அதில், “50 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவனையும் இப்பல்கலைக்கழகம் உண்டாக்கியதாக தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும் அவர் கல்வி எவ்விதம் அமையவேண்டும் என்றும் வேறொரு தருணத்தில் கூறும்போது, “பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்கு தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, கல்வியாகாது” என்றார். சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் கூறியது தற்போதைக்கும் பொருத்தமாக உள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்தால் வேதனையாக உள்ளது.
தற்போதைய மாணவர்கள் நிலை மிகவும் சிக்கலாக உள்ளது. தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலை, நினைத்த பாடப்பிரிவு கிடைக்கவில்லையென்றால் தற்கொலை, படிப்பதற்கு ஆசிரியர் கடிந்துகொண்டால் தற்கொலை, மருத்துவம் மற்றும் உயர்கல்வியில் நடத்தும் பாடப் பகுதிகள் புரிந்துகொள்ள முடியவில்லை யென்றால் தற்கொலை. எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் அரசு பாடச் சுமையை அதிகரித்துள்ளது. அனைத்து வகையான தேர்வுகளுக்கும் அடிப்படை நமது பாடப் புத்தகங்களே. எனவே, +2 வரையிலான பாடப்பிரிவுகளை நன்றாகப் படித்துவிடுங்கள் என்று கூறுவதற்கு பதில் 54 ஆயிரம் கேள்வி-பதிலையும் கூடுதலாகப் படிக்கக் கூறுவது ஒரு மூட்டையைச் சிரமப்பட்டு தூக்குகிறவனிடம் மேலும் ஒரு மூட்டையை தூக்கி வைப்பதாகும்.
ஒவ்வொரு பள்ளியும் 100% தேர்ச்சி வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்வதால், மாணாக்கர்களைப் படி படி என்று காலை முதல் மாலைவரை ஆசிரியர்களும், பெற்றோர்களும் அழுத்தம் கொடுப்பதுதான் அதிகமாக உள்ளது. இதன் மூலம், ‘உருப்போடுதலுக்கு மிஞ்சின குரு இல்லை’ என்ற நிலைக்கு மாணவர்களை ஆளாக்குகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட நிலையை மாற்றி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம், கணினி ஆகிய பாடங்களிலும் மொழிப்பாடங்களிலும் திறமையானவர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான முறையான வழியைத் தேட வேண்டும். இதை உறுதிப்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம்(WHO) கீழே குறிப்பிட்டுள்ள வாழ்க்கைத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் கல்விக் கொள்கையும், பாடத்திட்டங்களும், பாடநூல்களும் அமையவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
1. தன்னைத்தானே அறிதல்: ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை, தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. தகவல் தொடர்பாற்றல்: பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல், பிறர் புரிந்துகொள்ளும் விதமாக, தெளிவாக, உறுதியாக, பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் வேண்டும்.
3. பிறருடன் உறவு பேணும் திறன்: ஆரோக்கியமான மனித உறவுகள் வாழ்வின் வெற்றிக்கான அடித்தளம், பிறருடன் மரியாதை, மனித நேயத்துடன் பழகி, நல்லுறவைப் பேணுதல் வேண்டும்.
4. உணர்ச்சிகளைக் கையாளும் திறன்: தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், கையாளும் திறன். ஆங்கிலத்தில் ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்று கூறப்படுகிற உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு சார்ந்த திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
5. பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்: பிறர் நிலையில் தன்னை இருத்திப் பார்த்து, பிறரது உண்மையான நிலையையும், தேவைகளையும் புரிந்துகொண்டு, பிறர் நலனில் கவனம் செலுத்தி செயலாற்றும் திறனைப் பெற வேண்டும்.
6. ஆழ்ந்து சிந்திக்கும் திறன்: பார்த்து, கேட்டு, உரையாடி, அனுபவித்து, அலசி, சேகரித்த தகவல்களை, முறையாக கொள்கைப்படுத்த, நடைமுறைப்படுத்த, மதிப்பிட வகை செய்யும் சிந்தனைத்திறனும், ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வேண்டும்.
7. ஆக்கச் சிந்தனைத் திறன்: ஒரேமாதிரியாகச் சிந்திக்காமல்,(ஆங்கிலத்தில் ‘கிரியேட்டிவ் திங்கிங்’) மாறுபட்ட அல்லது படைப்புச் சிந்தனையுடன், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேல் தீர்வுகளை தேடும் சிந்தனை வேண்டும். இது படைப்புத்திறன் சார்ந்த சிந்தனை.
8. முடிவெடுக்கும் திறன்: முடிவெடுக்கும் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சாத்தியமான வழிகளைக் கண்டறிந்து, அவற்றில் சிறந்த வழியைத் தேர்ந்து, முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
9. பிரச்னையைத் தீர்க்கும் திறன்: பிரச்னையைத் தெளிவாக வரையறுத்து, தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து, சிறந்த வழியை ஆய்ந்து தேர்ந்து, அதன்மூலம் பிரச்னையைத் தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
10. மன அழுத்தத்தைத் தவிர்க்கும் திறன்: மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஒருவர் ஆளாகும்போது அதற்கான அடிப்படைக்கு காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும், தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, மன அமைதியையும், மன ஆரோக்கியத்தையும் விரைந்து அடையும் திறன் வேண்டும்.
வாழ்க்கைத் திறன்களைப் பெற என்ன செய்யவேண்டும்?
பாடங்களில் அதிக மதிப்பெண் பெற மனப்பாடம் என்ற தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறோம். அதை இவற்றிற்குப் பயன்படுத்த முடியாது. ஆசிரியர்கள் மாணவர்கள் உரையாடல் மூலமும், செய்முறை மூலமும்தான் இணைச் செயல்களைப் புரிந்துகொள்ளவைக்க முடியும். இணைவுக் கல்விகளான சுகாதாரம், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை பயிற்சி, உன்னை நீ அறிவாய் (உடல் உறுப்புகள் பேசுவது), பாலியல் கல்வி (வயதிற்கு ஏற்றவாறு), சட்டக் கல்வி, வானுலா கல்வி, சாலைவிதிகள் கல்வி, லஞ்சம் ஒழிப்பு, சாதிமறுப்பு, போதைப்பொருள்கள் தீமைகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தல், விவசாயம் சார்ந்த தகவல்கள் போன்றவற்றிற்கு பொதுக்கல்விபோல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
அனுபவம் வாய்ந்த கல்வியாளர் குழு பாடங்களை வரையறை செய்வது போல், இணைச்செயல்களையும் வரையறுத்து வழிகாட்ட மாவட்டங்கள்தோறும் குழுக்கள் அமைத்து செயல்படவேண்டும் (தற்போது NCC செயல்படுவதுபோல்). இணைச்செயல்கள் செய்முறை பயிற்சியாக இருக்கவேண்டும். இதற்குச் செயல்பாடுகள் பதிவு செய்து தனியாக சான்று வழங்க வேண்டும். வகுப்புக்கு ஏற்ற இணைவுச்செயல்கள் தேர்வு செய்வதும், அவற்றிற்குத் தகுதியான ஆசிரியர்களை கற்பிக்கச் செய்வதும் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பொறுப்பு.
அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களை அடிமையாகக் கருதக்கூடாது. மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மட்டும்தான் ஆசிரியர் வேலை. தம்மிடமுள்ள கருத்துகளை அவர்களிடம் புகுத்தாமல் மாணவர்களின் திறமைகளைப் பல இணைவுச்செயல்கள் மூலம் வெளியே கொண்டுவர வேண்டும்.
மாணவர்களின் தவறான முடிவுக்கு ‘தைரியம் கற்றுக் கொடுக்காமையே’ முக்கிய காரணம். அதற்குப் பொறுப்பு ஆசிரியர்கள், கல்வித்துறை, பெற்றோர் மற்றும் அரசு. பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ‘நீ தோற்றுவிட்டால் என்ன செய்வாய்?’ என்று பத்து ஆண்டுகளுக்கு முன் கேட்டபோதே, 15 மாணவ மாணவிகள் இருந்த குழுவில் ஒருவர்கூட தோல்வியுற்றால் திரும்ப எழுதி வெற்றிபெறுவேன் என்று கூறவில்லை.
ஒவ்வொருவரும் ‘அம்மாவின் முகத்தில் எப்படி முழிப்பேன்?’ ‘வீட்டிற்கே போக முடியாதே!’, ‘தந்தை உதைப்பாரே!’ என்பது போன்ற பதில்கள் கிடைத்தன. இப்போது அந்த நிலைமை அதிகமாகியுள்ளதே தவிர, மாணவர்களிடம் மனநிலையை மாற்ற எந்த முன்னெடுப்புகளும் நிகழவில்லை.
தோல்வி நிரந்தரமானதில்லை… வெற்றி வெகு தூரத்தில் இல்லை என்பதை மாணவர்களுக்குப் புரியச் செய்யவேண்டும். ஆகவே, மேற்கூறிய விதத்தில் மாணவர்களைப் பண்பட்டவர்களாக, திறமைசாலிகளாக, சுய சிந்தனையாளர்களாக உருவாக்குவதற்கான வழிமுறைகளும், கல்வித்திட்டங்களுமே மாணவர்களை மாற்றியமைக்கும்.
No comments:
Post a Comment