அரசு பள்ளிகளில், கவுரவ ஆசிரியர்களை நியமித்து, தேர்ச்சி
சதவீதத்தை அதிகரிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், மொத்தம் 480 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் 87,535 மாணவர்கள் படிக்கின்றனர். பதவி உயர்வு, பணி நிறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு பள்ளிகளில், கணிசமான அளவில் ஆசிரியர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்புவது இயலாத காரியம்.
அதேவேளையில், அந்த காலியிடங்களை கண்டுகொள்ளாமல் விட்டால், தேர்ச்சி சதவீதம் கடுமையாக பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் பள்ளி கல்வித் துறை, புது முடிவை எடுத்துள்ளது.
இதற்காக அரசு பள்ளிகள்தோறும், கவுரவ ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
திட்டம் எப்படி
இந்த கவுரவ ஆசிரியர் பணியிடங்கள், பட்டதாரிகளுக்கு தற்காலிக பணி வாய்ப்பை மட்டுமே கொடுக்கும். கவுரவ ஆசிரியர்கள் என்றாலும் வழக்கமான நியமன விதிகளின்படி ஓராண்டிற்கு மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்த கல்வியாண்டிற்கு அவர்களின் பங்களிப்பு தேவையென்றால் கல்வித் துறை செயலர் ஒப்புதலுலோடு நீட்டிக்கப்படுவர். இருப்பினும் மூன்றாண்டுக்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படாது.
நிபந்தனைகள்
ஒப்பந்த அடிப்படையிலான கவுரவ ஆசிரியர்கள் நியமனம் என்றாலும், கடந்த காலங்களை போன்று இல்லாமல் அதிக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவை,
போக்குவரத்து படி, பஞ்சப்படி, எச்.ஆர்.ஏ., கிடையாது.
பணி நிரந்தரம் கிடையாது.
மற்ற ஆசிரியர்களை போன்று, நீண்ட விடுமுறை எடுக்க முடியாது. ஒவ்வொரு மாத சேவைக்கு முடிவுக்கு பின், ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
ஓய்வூதிய பலன் இல்லை
எதிர்காலத்தில் சீனியாரிட்டி உட்பட எந்த உரிமையும் கோரி அரசு பலன்களை எதிர்பார்க்க கூடாது.
சம்பளம் எவ்வளவு
கவுரவ ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட உள்ள பாலசேவிகா, ஆரம்ப பள்ளி ஆசிரியர், தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், நுண்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் 18,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
கவுரவ ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ள டி.ஜி.டி., ஆசிரியர், பள்ளி நுாலகர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, மாதம் 22,000 ரூபாயும், விரிவுரையாளர், உடற்கல்வி விரிவுரையாளர், கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர், வெக்கேஷனல் இன்ஸ்ட்ரக்டர் பணியிடங்களுக்கு 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
அரசு பள்ளிகளில், கவுரவ ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ள பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகள் தோறும் உள்ள காலியிடங்களை திரட்டி வருகிறது. வெகு விரைவில் படித்த இளைஞர்களுக்கு கவுரவ ஆசிரியர் பொறுப்பினை அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளது.
டெட்டா..... போட்டி தேர்வா?
கவுரவ ஆசிரியர் பணிக்கு ஆரம்ப பள்ளி, டி.ஜி.டி., ஆசிரியர்கள் சேர டெட் (TET) தேர்வில் பாஸ் செய்திருப்பது அவசியம். 90 சதவீத டெட் மதிப்பெண்ணும், 10 சதவீத வேலைவாய்ப்பு சீனியரிட்டி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு இருக்கும்.கவுரவ ஆசிரியர் பணியிடத்திற்கு, டெட் அவசியம் இல்லையெனில், 90 சதவீத மதிப்பெண் போட்டி தேர்வு அடிப்படையிலும், 10 சதவீத வேலைவாய்ப்பு சீனியரிட்டி மதிப்பெண்ணிற்கும் வழங்கப்பட்டு, கவுரவ ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.
No comments:
Post a Comment