மூன்றாம் பருவம்: 1.25 கோடி புத்தகங்கள் தயார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 15, 2017

மூன்றாம் பருவம்: 1.25 கோடி புத்தகங்கள் தயார்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கு வழங்கப்படுவதற்காக 1.25 கோடி இலவச புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் முப்பருவ கல்விமுறை அமலில் உள்ள நிலையில் மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்துவரும் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி, மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை பள்ளிகள் திறந்த அன்றே (ஜன.2) வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1.25 கோடி மூன்றாம் பருவ புத்தகங்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நிகழ் கல்வியாண்டு முதல் கடந்த இரு பருவங்களாக அந்தந்த பள்ளிகளுக்கே புத்தகங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையே மூன்றாம் பருவத்திலும் தொடரும். இலவச பாடப் புத்தகங்கள் தவிர தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காக 65 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையை நேரிலும், இணையதளத்திலும் (www.textbookcorp.in) தொடர்பு கொண்டு உரிய பணத்தைச் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு புத்தகங்கள்...: வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1,2,6,9,11 ஆகிய 5 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படவுள்ளன. புத்தகங்கள் எழுதும் பணிகள் முடிவடைந்ததும் வரும் ஏப்ரல் மாதத்தில் அச்சிடும் பணி தொடங்கும்.

இதற்கிடையே அடுத்த கல்வியாண்டின் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சுமார் 1 கோடி புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை முன்கூட்டியே தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment