தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 14, 2017

தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் நிலை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வேளாங்கண்ணியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தீரமானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்கள் கூறும்போது, 35 மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களும், 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்களும் கடந்த 6 மாதமாக காலியாக இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆரம்ப கல்வி அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றில் 35 சதவீத இடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாலும், 40 சதவீதம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாலும் 25 சதவீதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப்-2 தேர்வு மூலமும் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு அது போல் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

தற்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருப்பவர்களில் மாதம் ஒருவர் வீதம் ஓய்வு பெற்று வருகிறார்கள். இதன் காரணமாகவும் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பும்போது தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாகிறது.

பல தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரி பணிகளை கூடுதலாக கவனிப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் பலர் கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலையும் நிலவுகிறது. எனவே காலி பணியிடங்களை நிரப்பினால் தான் தமிழகத்தில் கல்வி தரம் மேம்படும் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment