பாலிடெக்னிக் தேர்வில் மோசடி: பேராசிரியர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 14, 2017

பாலிடெக்னிக் தேர்வில் மோசடி: பேராசிரியர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்வர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். ஆனால் அதிக மதிப்பெண் எடுத்த பெரும்பாலானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் மனு அளித்தனர். விசாரணையில் இதில் பெருமளவில் மோசடி நடைபெற்றது. 57 மதிப்பெண் எடுத்தவர்கள் 140 மதிப்பெண்கள் எடுத்தது போன்றும், 150-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் 70 முதல் 80 மதிப்பெண் பெற்றதாகவும் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.

மதிப்பெண் பட்டியலை ஸ்கேன் செய்யும்போது இவ்வாறு திருத்தங்கள் செய்துள்ளனர். திருத்தங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரிடமும் இருந்தும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதிப்பெண் முறைகேடுகள் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியான பாலிடெக்னிக் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்களின் விடைத்தாள்களின் நகல்களை ஆசிரியர் வாரிய இணையதளத்தில் வெளியிட்டு அதில் முரண்பாடுகள் இருந்தால் வருகிற 18-ந்தேதி வரை நேரிலும், தபால் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் கூறுகையில், “விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று முறைகேடு நடந்தால் தொழில்நுட்பத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியாது.

எனவே உடனடியாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் தேர்வுகள் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும்” என்றார்.

No comments:

Post a Comment