நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் முக்கியமான பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் மற்ற எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின.
இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தாமதமானது. இந்நிலையில், குஜராத்தில் நேற்று கடைசி கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 14 புதிய மசோதாக்கள், நிலுவையில் உள்ள 25 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையடுத்து, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த நேற்று மாலை அனைத்துக் கூட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது சேம்பரில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், திரிணமூல் சார்பில் டெரக் ஓ பிரையன், சமாஜ்வாதியின் நரேஷ் அகர்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா உட்பட பிரதிநிதிகள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, நாடாளுமன்றத்தில் முக்கிய விஷயங்களை எழுப்பவும், மத்திய அரசுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment