அரசு பள்ளிகளில் ஆங்கிலம் சரளமாக கற்க 55 புதிய செயல்திட்ட கல்வி : ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசுப் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை சரளாக கற்பதற்கு 55 வகையான புதிய செயல் திட்ட கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் ஆங்கிலப்பாடம் கற்பதற்கு சிரமப்படுகின்றனர்.
1 முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ மூலம் அதிக கவனம் செலுத்தாமல் 9ம் வகுப்புக்கு வரும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இந்த சிக்கல் அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்கள் 10ம் வகுப்பு செல்வதிலும் தடை ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற 9ம் வகுப்பில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த “குறைதீர் கற்பித்தல்” என்ற புதிய முறையை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் செயல்படுத்த உள்ளனர்.
இதற்காக 55 வகையான ஆங்கிலம் கற்பித்தல் முறை குறித்த புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து படிப்படியாக ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகள் செயல்விளக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக மனித உடல் பாகம் குறித்த ஆங்கில சொற்கள் படத்துடன் உள்ளன. இந்த புத்தகம் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பது குறித்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பள்ளக்கால் பொதுக்குடி ஆசிரியை கலாவதி, மானூர் ரஸ்தா பள்ளி ஆசிரியை செண்பக லதா ஆகியோர் மாநில அளவிலான முகாமில் பயிற்சி பெற்றனர். இவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிற 9ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக 9ம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறன் அறிய ‘ரெமிடியல் டெஸ்ட்’ என்ற தேர்வு நடத்தப்பட்டது. இதில் 0 முதல் 20 மதிப்பெண் எடுத்தவர்கள் 20க்கு மேல் 40 மதிப்பெண் வரை எடுத்தவர்கள் விபரங்கள் கணக்கிடப்பட்டு இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக வாரத்திற்கு 3 வகுப்புகள் கூடுதலாக பயிற்சி பெறுவர்.
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நெல்லை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஒருநாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் ஆங்கில ஆசிரியர்கள் 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா ஆலோசனையின் கீழ் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காந்தி முன்னிலையில் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment