தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவிக்கப்படாத அவசர கால நெருக்கடி நிலை செயல்படுத்தப்படுகிறதா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் தன்னாட்சி நிர்வாகமா? தமிழக முதலமைச்சர் அவர்கள் இதனை அறிந்து செயல்பட முன்வருவாரா?
************************************
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளரும் உத்தரபிரதேச அரசையும், குஜராத் அரசையும் வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். மாண்புமிகு எடப்பாடியார் அரசு எங்கே போயிற்று?
2381 எல்கேஜி, யுகேஜி மையங்களை உயர்நிலை, நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் சனவரி 21-ஆம் தேதி தொடங்குகிறார்கள். 2381 பெண் ஆசிரியைகளை பல்வேறு பகுதிகளிலும், பள்ளிகளிலும் இருந்து மாற்றுப்பணியில் நியமனம் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பொதுவாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களின் செயல்பாடுகளில் எதேச்சதிகாரமும், அதிகார நெடியும் தான் காணமுடிகிறது. மனித நேயமும் இல்லை ஆனால் பிடிவாதமும், அத்துமீறலும் தான் காண முடிகிறது. கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் 2381 பெண் ஆசிரியைகள் இந்த மாற்றுப் பணியின் மூலம் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஒன்றியம் விட்டு ஒன்றியம் கூட பணியாற்றும் நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள். அம்மா அரசு பெண் ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியினைப் பாருங்கள் தீர்ப்பினை நீங்களே சொல்லுங்கள். எல்கேஜி, யுகேஜி தொடங்குவது வரவேற்க வேண்டிய ஒரு திட்டமாகும். மாண்டிசோரி முறையில் நிறைய பேர் படித்தவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். 2381 பேரை நியமனம் செய்து எல்கேஜி, யுகேஜி பிள்ளைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டலாம். 2,381 ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதுதான் இவர்களின் உள் நோக்கமாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி அரசு ஆண்ட இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் 15,000 தொடக்கப் பள்ளிகளை மூடியிருக்கிறார்கள்.குஜராத் மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை இதுவரை மூடியுள்ளார்கள்.பிரதமர் மோடி அரசு பதவியேற்ற இந்த நான்கரை ஆண்டு காலங்களில் 75 லட்சம் பேர் நாடு முழுவதும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். ஆனால் 8 துறைகளில் இவர்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பு 1.3 லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது என்ன ஆயிற்று? தமிழகத்தில் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் இணைக்கப்படும்போது 3500 தலைமையாசிரியர் பதவி இழக்கிறார்கள், 3500 சத்துணவு மையங்கள் மூடப்படுகின்றன, ஆயாக்கள் பதவி இழக்கிறார்கள் இன்னும் இவர்களுடைய ஆட்சிக் காலத்திற்குள் 8000 தலைமையாசிரியர் பணியிடங்கள் பறிபோகப் போகின்றன. 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நினைவு பணியிடங்களாக மாற்றிட உள்ளார்கள். இது நமக்கு விடப்பட்ட சவாலாக ஏற்று எதிர்கொள்ள வேண்டிய அபாய அறிவிப்பாகும். நாளை 11. 1. 2019 மதுரையில் கூட இருக்கிற ஜாக்டோ ஜியோ வின் முடிவு தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கின்ற உரிமைக்குரலாக வெளிவர வேண்டும். நீதிமன்றத்தை நாம் குறை சொல்ல முன்வரவில்லை.உச்சநீதிமன்ற தீர்ப்புகள், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மத்திய, மாநில அரசுகளால் கிடப்பில் போடப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளின் மூலம் அறிந்து வருகிறீர்கள். ஏன்! உயர் நீதிமன்ற நீதியரசர்களே எங்களுடைய தீர்ப்பினை அரசும் மதிப்பதில்லை, அதிகாரிகளும் மதிப்பதில்லை என்ற வேதனைக் குரலினை எழுப்பி வருவதை நம்மால் கேட்க முடிகிறது. இந்த நிலைமையில் மதுரை நீதிமன்றம் ஏழு அம்சக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இந்த அரசிடம் வலியுறுத்தும் என நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்து இருப்பது நம் சுய பரிசோதனைக்கு உட்பட்டதாகுமா? ஜாக்டி ஜியோ, ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் பெயரைச் சொன்னாலே புறநானூற்றுப் பாடல்களுக்குப் பொருளைத் தருகின்ற வீரஞ்செறிந்த அமைப்புகளாகும். எத்தனை எத்தனை வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திய அமைப்புகள், அனைத்து மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்த அமைப்பாகும். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் கொண்டுவந்தபோது நாம் வரவேற்றோம்.ஆனால் அந்தத் திட்டத்தில் தலைமை ஆசிரியர்களை ஈடுபடுத்த முன்வந்தபோது கடுமையாக எதிர்த்துப் போர்க் களத்தில் நின்றோம். பல்வேறு அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது களத்தில் நின்ற வீரஞ்செறிந்த ஆசிரியர்களின் போராட்டத்தைப் பார்த்து டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு அமைப்பாளர்களை தனியாக நியமனம் செய்தார்கள். அதுபோல் எல்கேஜி, யுகேஜி மையங்களை ஜூன் மாதம் தொடங்கி நடத்தட்டும்.ஜாக்டோ ஜியோ முடிவின்படி 2381 ஆசிரியைகளும் எல்கேஜி,யுகேஜி பணியில் சேருவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். எந்த தலைமை ஆசிரியர்களும் அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டாம். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பாதிப்பினை ஏற்படுத்தினால் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போர்க்களத்தில் நின்று குரல் கொடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.ஜூன் மாதம் வரையில் புதிய நியமனம் ஒத்திவைத்திடுமாறு வலியுறுத்துவோம்.பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினை அவமதித்த பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு கண்டனம்.
08 .01 .2019 அன்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளரை மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்கச் சென்றபோது அறைக்குள் அழைத்து பேசாமல் வெளியில் வந்து நின்றபடியே அங்கன்வாடி மையம் இணைப்பது தொடர்பாகவும், பள்ளிகளை இணைப்பது தொடர்பாகவும் அவரது கருத்தையே நிலைநாட்டிச் சென்றுள்ளார். நாளை எடுக்கிற முடிவு ஜாக்டோ ஜியோ அமைப்பின் பழைய வரலாற்றினை பாதுகாக்கிற முடிவாக அமையட்டும். நம்பி இருக்கிற 10 லட்சம் பேரின் நம்பிக்கையின் அடையாளமாக, போராட்ட அறிவிப்பு அமையட்டும். ஒன்றுபட்டு நிற்கிறபோது ஜாக்டோ ஜியோ என்பதை இனி பிரித்து எழுத வேண்டாம். எந்த காலத்திலும் பிரியாத ஒரு அமைப்பாகவே அது வளரட்டும். திட்டமிட்டபடி போராட்டத்தை அறிவியுங்கள்.
இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
என்ற கோரிக்கை முழக்கத்தோடு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் அணிவகுத்து போர்க்குண நடைபோடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். எடுக்கும் முடிவு தன்மானத்தை காக்கக்கூடிய முடிவாக அமையட்டும்.
பொங்கல் நாட்களை போராட்ட தயாரிப்பு நாட்களாக ஆக்கிடுவோம்
போர்க்குண வாழ்த்துகளுடன்,
வா. அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.
No comments:
Post a Comment