தேசிய அறிவியல் கண்காட்சி- திட்டப் போட்டி: தென் மண்டல அளவில் தமிழக மாணவருக்கு 2-ஆம் இடம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 9, 2014

தேசிய அறிவியல் கண்காட்சி- திட்டப் போட்டி: தென் மண்டல அளவில் தமிழக மாணவருக்கு 2-ஆம் இடம்

ஆக்கப்பூர்வ ஆய்வுக்காக அறிவியல் புத்தாக்கத்தின் (இன்ஸ்பைர்) கீழ், தில்லியில் நடைபெற்ற நான்காவது தேசிய அளவிலான கண்காட்சி - 2014 மற்றும் திட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நகராட்சிப் பள்ளி மாணவரின் படைப்பு தென் மண்டல அளவில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டது. மேலும், மாநில அளவில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் அறிவியல் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தில்லி பிரகதி மைதானில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் தனித் தனி அரங்குகளில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட அளவிலான போட்டியில் தமிழகத்தில் இருந்து 8,950 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவற்றில் 680 படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வாகின. அதில், தேர்வு செய்யப்பட்ட 41 படைப்புகள் தேசிய அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவற்றில் நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர் எம். கோகுல் காட்சிப்படுத்தியிருந்த "வாகனத்தில் விபத்துத் தடுப்புக்கான சிறப்பு அமைப்பு' மாதிரி படைப்பு தென் மண்டல அளவில் (தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி) இரண்டாம் இடம் பெற்றது.

மேலும், மாநில அளவிலான திட்டப் போட்டியில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி கே. இளையபாரதியின் தையல் இயந்திரம் மூலம் நீர் இறைக்கும் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூர் மாவட்டம், வெள்ளியனை, அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் மாணவர் எம். சதீஷ் குமாரின், கருவேலம் மரத்தின் கூழ் மூலம் மின்சாரம் தயாரிக்கும் படைப்புக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

இதையடுத்து, புதன்கிழமை பிரகதி மைதானில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இவர்கள் மூவருக்கும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலர் விஜய் ராகவன் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். மாநில, மண்டல அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 56 பேருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

தேசிய அளவில் கோவா முதலிடம்: தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோவா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜுலேகா ஜுலியா அந்தாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பெற்ற ஆந்திர பிரதேசம் மாணவி ஜயனி ஜான்விக்கு வெள்ளிப் பதக்கம், மூன்றாமிடம் பெற்ற அசாமை சேர்ந்த கேந்திரிய வித்யலாயா சங்கதன் பள்ளியின் சஞ்சு பால், உபைன் போரா ஆகிய இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவருக்கும் ரொக்கப் பரிசு, மடிக் கணினி ஆகியவையும் வழங்கப்பட்டன.

தமிழகத்துக்குப் பாராட்டு: மாநிலங்களில் "இன்ஸ்பைர்' கண்காட்சியை சிறப்பாக நடத்தியதற்காக மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டனர்.

No comments:

Post a Comment