நேரு பிறந்த தினமான இன்று, நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை முகப்பேரி வேலம்மாள் பள்ளியில் குழந்தைகள் தினம் வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை வகுப்புகள் உள்ளன.
இதில் ஏராளமான இரட்டை குழந்தைகள் படிக்கிறார்கள். குழந்தை தினத்தையொட்டி அவர்களை சிறப்பு செய்யலாம் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.
இந்த பள்ளியில் அண்ணன்–தம்பி, அக்காள்– தங்கை என மொத்தம் 76 ஜோடி இரட்டை குழந்தைகள் படிக்கிறார்கள். ஒவ்வொரு இரட்டை குழந்தை ஜோடியும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று 76 ஜோடிகளில் ஒவ்வொரு ஜோடி குழந்தையும் ஒரே மாதிரியான சீருடை, ஒரே மாதிரி செருப்பு, ஒரே மாதிரி கைக்கடிகாரம், ஒரே மாதிரி அணிகலன்கள் அணிந்து வந்தனர். பள்ளியில் அவர்கள் ஒன்றாக அணிவகுத்து வந்தனர்.
இந்த இரட்டை குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக பிரபல திரைப்பட பாடகிகளும், இரட்டையர்களுமான பாம்பே சகோதரிகள் சரோஜா– லலிதா ஆகியோர் பள்ளிக்கு வந்திருந்தனர். இரட்டை குழந்தைகளுடன் சேர்ந்து இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
76 ஜோடி இரட்டைகளும் ஒன்றாக தோன்றியது, பார்வையாளர்களை கவர்ந்தது. ஒரே மாதிரியான சீருடையில் இரட்டையர்கள் வந்திருந்தது, இரண்டு பேரில் யாருக்கு என்ன பெயர் என்று அடையாளம் காண முடியாதபடி இருந்தது.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு ஆடை அணிகலன் போட்டி, சிறந்த இரட்டையர்களுக்கான போட்டி, தனித்திறன் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடந்த இரட்டையர்களின் பங்கேற்பு ருசிகரமாக இருந்தது. குழந்தைகள் தின விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும் இருந்தது என்று குழந்தைகளின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment