ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க எளிய முறை அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 11, 2014

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க எளிய முறை அறிமுகம்


             மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமானதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அவர்களின் நலனுக்காக, ‘ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது, ‘ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டம் ஆகும்.

               இதற்காக, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர் தனது கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ பயோமெட்ரிக் விவரங்களை படித்தறியக்கூடிய கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும். அதைப் பயன்படுத்தி, தனது ‘ஆதார்’ எண், பயோமெட்ரிக் தகவல்கள், அப்போதைய நேரம், நாள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை மத்திய விவரத்தொகுப்புக்கு (டேட்டா பேஸ்) அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்மூலம், ஓய்வூதியத்தை விடுவிக்கும் அமைப்பு, டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும். சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர், அந்த நேரத்தில் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஆதாரமாக கொள்ளப்படும். அதன் அடிப்படையில், அவரது வங்கிக்கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும். கூடுதல் செலவின்றி, ஓய்வூதியதாரர்கள் இச்சேவையை பெறுவதற்காக, சிறப்பு மையங்களும் இயக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment