ஆண்குழந்தையோ பெண் குழந்தையோ - அடலஸன்ட் எனப்படும் பதின்ம பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். வீடு நிறைய பெரியவர்களும் பெண்களும் நிறைந்து இலைமறையாக சொல்லிக்கொடுத்த காலம் அல்லவே இது. பெற்றோர் வாழ்வாதாரத்தைத் துரத்தும் நிலையில், குழந்தைகளின் சந்தேகங்களை நிவர்த்திக்க யாரேனும் மெனக்கெட வேண்டியது அவசியம்தானே?
ஆண் குழந்தைகள் மனநிலை வேறு மாதிரி என்றால், பெண் குழந்தைகளுக்கோ உடல்ரீதியான சந்தேகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் பூதாகரமாக இருக்கும். வகுப்பில் பெரிய விஷயமாகப் பேசப்படுவது, 'பெரிய மனுஷியாகிவிட்டாளா’ என்பதாகவே இருக்கும். தோழிகளின் உடல்வாகுடன் தன்னுடலை ஒப்பிடுவதில் தொடங்கி, எத்தனையோ விஷயங்கள் அவர்களை அலைக்கழிக்கும்.
பருவம் எய்துதல்
இப்போதைய உணவு, வாழ்க்கை முறைகளால் பெண்குழந்தைகள் பொதுவாக பத்து வயதிலிருந்தே பருவம் எய்த ஆரம்பிக்கிறார்கள். அதனால், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்பாகவே மனரீதியாக குழந்தைகளை தயார்படுத்த வேண்டும். உடலின் ரோம வளர்ச்சியானது, ஒரு குழந்தை பெண்ணாகத் தயாராகிறாள் என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். பருவ மாறுதல்களை சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் ஏற்படப்போகும் கலவையான உணர்வை எப்படி எதிர்கொள்வது என்று தெளிவாக கற்றுக்கொடுங்கள். வீடு அல்லாத வெளி இடங்களில் பருவம் எய்தினால், அதனை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்றாக மனதில் பதிய வையுங்கள். பள்ளி ஆசிரியையிடமும் இதனை ஒருமுறை தெரிவிப்பது பல்வேறு சங்கடங்களைத் தவிர்க்கும்.
பள்ளியில் பருவமெய்தும் குழந்தைகள் அதிகமாக வெட்கப்படுவதாகவும், மீண்டும் பள்ளிக்குச் செல்லும் நாளை பதற்றமாக எதிர்கொள்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைக்கு சில விஷயங்களை தெளிவாகப் புரிய வையுங்கள்... முக்கியமாக - ‘உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் இது நடக்கும். அதனால் அச்சப்பட அவசியம் இல்லை’ என்பதை. நாப்கின் உபயோகிப்பது எப்படி என்று ஒரு முறைக்கு பலமுறை செய்து காட்டவேண்டும். வெட்கப்பட அதில் ஒன்றும் இல்லை என்றும், இயல்பாக அதனை கடக்கவும் பழக்க வேண்டும்.
அனாவசிய பயமுறுத்தல்கள், மூட நம்பிக்கைகள் மற்றும் சிறிய வலியை பெரியதாக விளக்குவதும் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் கலவரப்படுத்தும். எந்த மறைமுகப் பெயர்களும் இல்லாமல் ‘பருவம் எய்துதல்’ என்றால் என்ன, ஏன் வருகிறது என்பதைத் தேவைக்கு ஏற்ப விளக்கி, அது குறித்த அறிவியல் பூர்வமான புத்தகங்கள் இருப்பின், அவற்றைக் கொடுத்தும் கற்றுத் தரலாம். பருவமெய்திய குழந்தையின் பள்ளிப் பையில் எப்போதும் ஓர் உள்ளாடையும் நாப்கினும் ஒரு கவரும் இருப்பது அவசியம். உடைகளில் பட்டாலும் அது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று சொல்லி வைக்கவும். இதை இயல்பான ஒரு விஷயமாகக் கையாளத் தெரிந்தால் பல்வேறு மன அழுத்தங்களை தவிர்க்க முடியும்.
உடல்ரீதியான மாற்றங்கள்
திடீரென உயரமாவது, கன்னத்தில் சிறு பருக்கள், வெளித்தோற்றம் மட்டுமின்றி வியர்வை வாசனையும் மாறுவது போன்றவை அவர்களை கொஞ்சம் கலவரப்படுத்தக்கூடும். இவையெல்லாம் மிக மிக இயற்கையானவை. ஒரு பெண் போல் இன்னொரு பெண்ணுக்கு உடல் அமைப்பும் தோற்றமும் இருக்காது எனப் புரிய வையுங்கள். ‘பர்சனல் ஹைஜின்’ எனப்படும் சுகாதாரம் குறித்தும் விளக்கமாக கற்றுத் தருதல் அவசியம். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றுதல், சத்தான உணவு உண்ணுதல், நிறைய நீர் அருந்துதல், உடற்பயிற்சி செய்தல், ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை வழக்கமாகப் பழக்குங்கள். அடுத்த குழந்தையுடன் உடல்ரீதியான ஒப்பீடு அனாவசியம். நிறம், அளவுகள், வாசனைகள், மாதவிலக்கு நேர சுழற்சிகள் எல்லாமே ஒருவர் போல இன்னொருவருக்கு இருக்காது. இது போன்ற அனைத்தையும் குழந்தைக்கு அவசியம் கற்றுத்தர வேண்டும்.
Very very useful message to every parents
ReplyDelete