நன்றாக படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 17, 2014

நன்றாக படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

 கோவை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 கணிதம் - அறிவியல் பிரிவு படிக்கும் மாணவர்களில், முதல் மதிப்பெண் பெறும் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுத்து, எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புக்கு அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 18 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு ஆரம்பம் முதல், மாலை 4:30 - 5:30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
அரையாண்டு தேர்வு முடிந்ததும், ஜன., முதல் வாராந்திர மற்றும் மாத தேர்வுகள்
நடத்தப்படவுள்ளது. காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடப்பதால், மாணவர்கள் சோர்வை போக்க, மாலை நேர சிற்றுண்டியும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும், சுமாராக படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றிபெற தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெற்றாலும், அதிகப்படியான மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புக்கு செல்வதில்லை.
மாணவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, தயக்கம் பெரும் தடைக்கற்களாக உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டை பெற, கட்-ஆப் பெறவும் சிறப்பு பயிற்சி அளிக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைத்து, கணிதம் - அறிவியல் குரூப் தேர்வு செய்ய வைக்கவும், பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், ஒவ்வொரு பள்ளியிலும், டாப்பர் மாணவர்களை தேர்வு செய்து, இந்த சிறப்பு பயிற்சி திட்டத்தை செய்யப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில், பிளஸ் 2 சயின்ஸ் குரூப் மாணவர்களை இலக்காக கொண்டு, சூப்பர் 30 என்ற, சிறப்பு பயிற்சி முகாம் திட்டத்திற்கு, மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்கு, மேயர், அமைச்சர் மட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதால், அரையாண்டு தேர்வு முடிந்ததும், சூப்பர் 30 சிறப்பு முகாம் துவங்குகிறது. பொதுவான டிப்ஸ், உயிரியல் பாடப்பிரிவுக்கு கமிஷனரே வகுப்பு எடுக்கவுள்ளதாக தெரிகிறது.
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. விளையாட்டு, கலை இலக்கியம், கல்வி அனைத்திலும் சிறப்பு தகுதிகள் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்தேன். அதேபோன்று, எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் மேற்படிப்புக்கு சென்றவர்கள் பட்டியலையும் பார்வையிட்டேன்.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு கட்-ஆப் குறைவாக இருப்பதால், சுயநிதியில் படிப்பை தொடர முடியாமல், வேறு பாடப்பிரிவை தேர்வு செய்ததை அறிந்தேன். அதனால், பிளஸ் 2 சயின்ஸ் குரூப்பில், நன்றாக படிக்கும் 30 மாணவர்களை தேர்வு செய்து, அவர்கள் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வுசெய்ய வைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன்.
மொத்தமுள்ள 18 பள்ளிகளில் இருந்து, 25 மாணவிகள், 5 மாணவர்கள் என 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரையாண்டு தேர்வுகள் 23ம் தேதி நிறைவடைகிறது. அதன்பின், 24ம் தேதி முதல், ஜன., 2ம் தேதி வரை, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு நாட்கள் 12 பிரிவுகளாக சிறப்பு வகுப்பு நடக்கிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடக்கவுள்ளது.
மாநகராட்சி பள்ளியில், அனுபவமிக்க பாட ஆசிரியர்களை தேர்வு செய்து, இந்த முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும், மருத்துவம், பொறியியல் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் செல்ல வேண்டும் என்பதே, சூப்பர் 30 திட்டத்தின் நோக்கம். இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
சிகரத்தை அடைய...
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில், மருத்துவம், பொறியியல் படிப்புக்கு மாணவர்களை அரசே தயார்படுத்துகிறது. தமிழகத்தில், கன்னியாகுமரி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டர்கள் இந்த திட்டத்தை ஊக்குவித்து மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, இந்த திட்டம் துவங்கப்படுகிறது.
அதேவேளையில், பொதுத்தேர்வில் பாஸ் ஆவதே சிரமமாக இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, வெற்றிபெற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பள்ளிகள், கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 92 சதவீதம் வெற்றி பெற்றன; இந்தாண்டு, 100 சதவீத இலக்கை நோக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார், கமிஷனர்.

No comments:

Post a Comment