அதிகாரிகளின் கல்வித்தகுதி விபரம் தர முடியாது'; தகவல் சட்ட மனுவுக்கு மாநகராட்சி 'முரண்டு' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 15, 2014

அதிகாரிகளின் கல்வித்தகுதி விபரம் தர முடியாது'; தகவல் சட்ட மனுவுக்கு மாநகராட்சி 'முரண்டு'

கோவை மாநகராட்சியில், உதவி பொறியாளர், உதவி கமிஷனர் என, பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியில் சேர்ந்தபோது அவர்களின் கல்வித்தகுதி என்ன, தற்போது அவர்களின் கல்வித்தகுதி என்ன, என்ற விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க முடியாது' என, மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
                       ''அரசு அலுவலர் ஒருவரின் பணிப்பதிவேடு என்பது பொது ஆவணம்; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அந்த ஆவணத்தை வழங்க மறுக்கக்கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க, அந்த அலுவலரின் அனுமதி தேவையில்லை என, மாநில தகவல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள், கடைமட்ட ஊழியர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். தபாலில் படித்தும், இரவு நேர கல்லுாரிகளில் படித்தும், சட்ட விதிமுறைகளுக்கு முரணாக பதவி உதவி பெற்றுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் சிலரே, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.மாநகராட்சியில் சுகாதார பிரிவில், கடைமட்ட அலுவலராக பணியில் சேர்ந்து, சட்ட விதிகளுக்கு முரணாக, நிர்வாக பிரிவுக்கு மாறுதல் பெற்று, பல்வேறு பதவி உயர்வு பெற்றுள்ளதையும், மாநகராட்சி பொறியியல் பிரிவில் குடிநீர் மீட்டர் ரீடராக பணியில் சேர்ந்து, பல பதவி உயர்வுகள் பெற்று உயர்ந்த பதவியில் இருப்பதையும் மாநகராட்சி ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சியில் இளம் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், செயற்பொறியாளர், உதவி கமிஷனர்கள், மாநகர பொறியாளர், உதவி நகரமைப்பு அலுவலர்கள், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட, 95 அதிகாரிகள் பணியில் சேர்ந்த போது அவர்களின் கல்வித்தகுதி என்ன? என்று, வெள்ளலுாரை சேர்ந்த டேனியல் ஏசுதாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், கேள்விகள் கேட்டுள்ளார். இதனால், மாநகராட்சி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலர் மற்றும் உதவி கமிஷனர் (நிர்வாகம்) சுந்தரராஜ், வழங்கியுள்ள பதிலில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாநகராட்சி அலுவலர்கள்,
95 பேரின் பணிப்பதிவேடுகளை முழுமையாக தணிக்கைக்கு உட்படுத்தி, அவர்கள் பணியில் சேர்ந்த பொழுது அவர்களின் கல்வித்தகுதி, பணியில் இருந்து கொண்டே கூடுதல் கல்வி தகுதி பெற்ற விபரங்கள், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை பட்டியலிட்டு தகவலாக வழங்க கோரப்பட்டுள்ளது.'தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட விபரங்கள், அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள தகவல்கள் இல்லை. மேலும், இத்தகவல்கள் தனி நபர் பற்றிய தகவல் என்பதாலும், இத்தகவல்களை பெறுவதற்கான பொதுநோக்கம் இல்லாததாலும், தகவல் வழங்க இயலாது' என, தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விகளுக்கு, மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலர் கொடுத்துள்ள விளக்கம், அதிகாரிகளின் கல்வித்தகுதி மற்றும் பதவி உயர்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பதாரர் டேனியல் ஏசுதாஸ் கூறுகையில், ''மாநகராட்சியில் குறைந்தபட்ச கல்வித்தககுதியில் கடைநிலை அலுவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள், தபால் மூலமும், இரவு கல்லுாரிகளில் படித்தும், கல்வி தகுதி அடிப்படையில் பல நிலை பதவி உயர்வு பெற்றுள்ளனர்.''தகுதியான, திறமையான அலுவலர்கள் இல்லாததால், மாநகரத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படுவதில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் சுணக்கம் ஏற்படுகிறது. பொறியியல், சுகாதாரம், குடிநீர், வளர்ச்சி திட்டப்பணிகளில் திட்டமிடல், தொலைநோக்கு பார்வை இருப்பதில்லை.''அதிகாரிகளின் கல்வித்தகுதி, பணிப்பதிவேடு என்பது பொதுமக்கள் பார்வைக்கு வழங்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையம் பல கட்டங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலர், தகவல்களை வழங்க முடியாது என, அறிவித்துள்ளது, சட்டத்துக்கு முரணானது,'' என்றார்.

'மேல்முறையீடு செய்யலாம்!'
கோவை மாவட்ட மூத்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் பாஸ்கரன் கூறுகையில், ''அரசு அலுவலர் ஒருவரின் பணிப்பதிவேடு என்பது பொது ஆவணம்; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அந்த ஆவணத்தை வழங்க மறுக்கக்கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க, அந்த அலுவலரின் அனுமதி தேவையில்லை என, மாநில தகவல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால், மாநகராட்சி அலுவலர்களின் பணிப்பதிவேடு விபரத்தை மேல்முறையீடு செய்து பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.


No comments:

Post a Comment