புதிய வெப் பே ரோல் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் ஊதியம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 4, 2015

புதிய வெப் பே ரோல் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் ஊதியம்

கருவூலத்துறையில் சம்பளப் பட்டியல் பதிவுக்கு ஆன்-லைன் முறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெப் பே ரோல் எனப்படும் புதிய திட்டத்தால் கடந்த மாதத்துக்கான சம்பளத்தை பெரும்பாலான அரசுத்துறை ஊழியர்கள் பெறாமல் இருந்து வருகின்றனர்.

மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம், செலவுத்தொகைகள் கருவூலத்துறை மூலமாக வழங்கப்படுகின்றன. ஊழியர்களின் சம்பளப் பட்டியல் விவரத்தை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி, ஒவ்வொரு ஊழியர்களின் சம்பள பட்டியல் விவரத்தை சி.டி. அல்லது ஃபிளாப்பி போன்றவற்றில் பதிவு செய்து துறை சார்ந்த கணக்குத்துறை எழுத்தர்கள் கொண்டு சென்று கருவூலத்துறையிடம் கொடுத்து வந்தனர்.

அந்த பட்டியலைக் கொண்டு ஊழியர்களின் சம்பளத்தொகை அவர்களது வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் கருவூலத்துறை ‘வெப் பே ரோல்’ புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு அரசுத் துறையும் ஊழியர்களின் சம்பளப் பட்டியல் விவரங்களை சி.டி.களில் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருவூலத்துறையின் ஆன்-லைன் இணையத்தில் ஊழியர்களின் விவரங்கள், சம்பளம் பட்டியல் ஆகியவற்றை, குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆன்-லைன் பதிவுக்கு தேவையான பயிற்சியை வழங்காததாலும், தேவையான கணினி, இணைய வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தராமல் திடீரென கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.குமார் கூறியது:

வழக்கமாக, மாத இறுதி நாளான 30 அல்லது 31-ம் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இதுவரையிலும் வணிகவரித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பெரும்பாலான துறை ஊழியர்களுக்கும் ஜனவரி மாதச் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை.

வெப் பே ரோல் திட்டத்தின்கீழ் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டி இருப்பதால் காலதாமதம் செய்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டோம். வெப் பே ரோல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக தேவையான வசதிகளை செய்து தருமாறும், சம்பளத்தை தாமதம் இல்லாமல் வழங்குமாறு கூறினோம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தாமதமாகி உள்ளது. சம்பளம் கிடைப்பதற்கு இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

‘விரைவில் வழங்கப்படும்’

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனாபட்நாயக்கை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போதும், பதில் பெற முடியவில்லை. கருவூலத்துறை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆன்-லைன் பதிவிடும் பணி முறைப்படி பட்டியல் இன்னும் சில துறைகளில் இருந்து வராததால் சம்பளம் வழங்கவில்லை. விரைவில் வழங்கப்பட்டுவிடும் என்றார்.

No comments:

Post a Comment