வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய ரெயில்வேயில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அவர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்காக ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் வாடகைத் தாய் கருவுற்று 33 வாரங்கள் நிறைவுற்ற நிலையில், ரெயில்வேயில் வேலை செய்யும் பெண் தனக்கு பிரசவக் கால விடுமுறை வேண்டி விண்ணப்பம் செய்தார். அவரது விண்ணப்பத்தை ரயில்வே நிர்வாகம் நிராகரித்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு விடுமுறை அளிக்க இயலாது என கூறியது.
இதையடுத்து அந்தப் பெண் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனூப் மோக்தா, ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அப்பெண்ணுக்கு மற்ற பெண்களைப் போன்று 180 நாள்கள் பிரசவ கால விடுமுறை வழங்குமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.
வழக்குத் தொடுத்தவர் குழந்தையை பெற்றெடுக்காத நிலையிலும், வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, பிறந்தது முதல் அவரிடம்தான் இருக்கும். பச்சிளம் குழந்தையை தவிக்க விடமுடியாது. மேலும், குழந்தைகள் தங்களது முதல் வயது வரை தாயின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment