காஞ்சிபுரம் மாவட்டத்தில், சித்தாமூர், லத்துார் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்களில், குடியிருப்புகளுக்கு அருகே, புதிதாக, ஐந்து தொடக்கப் பள்ளிகள் துவங்க, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடங்களில், பள்ளிகள் இல்லாத பகுதிகளை தேர்வு செய்து, அங்கு, கல்வித்துறை சார்பில், புதிய பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.
ரூ.20 லட்சம்:
அதேபோல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள, தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டு, நடுநிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்ட சபையில், கடந்த ஆண்டு செப்., 23ம் தேதி, 110 விதியின் கீழ், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'தமிழகம் முழுவதும், ஐந்து அரசு தொடக்கப் பள்ளி கள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 39 குடியிருப்பு பகுதிகளில், புதிதாக தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்' என, அறிவித்தார். அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள இடங்களில், பள்ளிகள் இல்லாத, 39 குடியிருப்புகள் கண்டறியப்பட்டன. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து குடியிருப்பு பகுதி களில், பள்ளி செல்லா குழந்தைகளை கொண்டு, உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டது. அந்த பகுதிகளில், புதிதாக தொடக்கப் பள்ளிகள் துவங்க, கடந்த மாதம், 28ம் தேதி, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.புதிய பள்ளிகள் கட்ட, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தலா 19.99 லட்சம் ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது, பள்ளிகளுக்கு கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
ஜூனில்...
இந்தப் பள்ளிகளில், ஒரு தலைமையாசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த கல்வியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்தில், சிறுவள்ளூர்; திருப்போரூரில், பெரியார் நகர்; தையூர் ஊராட்சியில், ஏரி எதிர்வாயில்; சித்தாமூரில் குறும்பரை; லத்துாரில் கொளத்துார், மாளச்சேரி ஆகிய ஆறு இடங்களில் தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டன.
இதுகுறித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:புதிதாக பள்ளிகள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களிலும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்க, அரசு உத்தரவிட்டது. பள்ளிகளுக்கு தேவையான கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் புதிய கட்டடங்களில், குழந்தைகள் பயிலும்.இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி துவங்க உள்ள இடங்கள்
ஒன்றியம் ஊராட்சி குடியிருப்பு
உத்திரமேரூர் தளவராம்பூண்டி வினோபா நகர்
இலத்துார் பச்சம்பாக்கம் நரியூர்
இலத்துார் கல்குளம் சேவூர்
சித்தாமூர் சூணாம்பேடு வெள்ளங்கொண்டகரம்
சித்தாமூர் கல்பட்டு கல்பட்டு
No comments:
Post a Comment