இளங்கலை இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலம்...கேள்விக்குறி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 13, 2016

இளங்கலை இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலம்...கேள்விக்குறி!

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாகாததால், அவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

புதுச்சேரியில் தாகூர் கலைக்கல்லுாரி, ராஜிவ்காந்தி கலை, அறிவியல் கல்லுாரி, கஸ்துார்பாய் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லுாரி, காமராஜர் கல்லுாரி, பாரதிதாசன் உள்ளிட்ட 6 கல்லுாரிகள் உள்ளன. காரைக்காலில் அண்ணா கலை, அறிவியல் கல்லுாரி, அவ்வையார் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியும், மாகி ஏனாமில் தலா ஒரு கல்லுாரியும் உள்ளன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இளங்கலை படித்து வருகின்றனர்.

அரசு கல்லுாரிகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, வரலாறு, பொருளாதாரம், பி.எஸ்.சி., இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், பி.பி.ஏ., பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் உள்ளன. அரசு கல்லுாரிகள் மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் பயிலும் இறுதியாண்டு (3ம் ஆண்டு) மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம், கடைசி செமஸ்டர் தேர்வு நடந்து முடிந்தது. அதற்கான தேர்வு முடிவு இதுவரை வெளியிடவில்லை.

இளங்கலை முடித்த மாணவர்களுக்கு, புதுச்சேரியில் முதுகலை (எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்.,) பயில புதுச்சேரி பல்கலைக்கழகம், லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் மட்டுமே உள்ளது. பாரதிதாசனில் பெண்கள் கல்லுாரியில் சில முதுகலை படிப்புகள் மட்டுமே உள்ளது.

தேர்வு முடிவு வெளியிடாத நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2016-17ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.காம்., உள்ளிட்ட படிப்பிற்கான சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்புகளும் துவங்கி விட்டது.

இறுதியாண்டு தேர்வு முடிவு வெளியிடாததால், பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தேர்வாகியும், பல்கலைக் கழகத்தில் சேர முடியாமல் மாணவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

அதுபோல் லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பம் வழங்க 15ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ட மேற்படிப்பு மையத்திலும் சேர முடியாத நிலை உருவாகியுள்ளதால், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இளங்கலை இறுதியாண்டு முடித்த ௩000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது.

அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி அரசு மற்றும் தனி யார் கல்லுாரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு விடைத்தாள், அதே மாதம் அந்தந்த கல்லுாரிகளில் இருந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 மாதங்கள் விடைத்தாள் திருத்தப்படாமல் வைக்கப்பட்டு இருந்தது.

பி.காம்., வணிகவியல் விடைத்தாள்கள் இன்று (13ம் தேதி) முதல் திருத்தும் பணி துவங்க உள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிய ஒரு மாத காலம் தேவைப்படும். அதன்பின்பே தேர்வு முடிவு வெளியாகும்.

இதனால், இந்தாண்டு இளங்கலை இறுதியாண்டு முடித்த மாணவர்கள், முதுகலை படிப்பில் சேர முடியாது. புதுச்சேரிக்கு அருகில் உள்ள தமிழக பல்கலைக்கழகங்களிலும் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத் தின் மெத்தன நடவடிக்கையால், இளங்கலை இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது.

சபாஷ் பாரதிதாசன் கல்லுாரி

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது என்பதால், சட்டசபை தேர்தலுக்கு முன்பே இறுதியாண்டு தேர்வை நடத்தி, உடனுக்குடன் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

இதனால், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் படித்த மாணவியர் தற்போது எளிதாக முதுகலை படிப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

No comments:

Post a Comment