பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப நிலையை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி மதுரை மண்டல அலுவலகத்தில் அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 2, 2016

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப நிலையை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி மதுரை மண்டல அலுவலகத்தில் அறிமுகம்

பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த தகவலை வாட்ஸ் அப் மூலம் அறிந்து கொள்ளும் புதிய முறையை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா நேற்று தொடங்கி வைத்தார்.பாஸ்போர்ட்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளன. இதற்காக மதுரை மற்றும் நெல்லையில் தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் ஜூன் மாதம் 20–ந் தேதி வரை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 444 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 130 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலைமை குறித்து தெரிந்து கொள்ள மற்றும் குறைகளை தெரிவிக்க பேஸ்புக், டுவிட்டர் மற்றும் பிரத்யேக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.வாட்ஸ் அப் சேவை

இந்தநிலையில், வாட்ஸ்அப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் புதிய வசதியை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–விண்ணப்பதார்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த குறைதீர்ப்பு மையம் தற்போது வாட்ஸ் அப் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு பதிலளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மண்டல அலுவலகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பநிலை குறித்த தகவலை தெரிந்து கொள்ள விரும்பினால் 8870131225 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பலாம்.நோட்டீசு

அப்போது, விண்ணப்பதாரின் பெயர், பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேலும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து வரும் விசாரணை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் மட்டுமே தகவலை பெற முடியும். போலி சான்றிதழ் இணைப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ஊழியர்களே போலியாக பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளதாக நகராட்சி கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். எனவே மதுரை மண்டல அலுவலகத்துக்கு குளித்தலை நகராட்சியில் இருந்து பிறப்பு சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்கள், பாஸ்போர்ட் பெற்றவர் 181 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.முடக்கம்

இவர்களின் பிறப்புச்சான்றிதழ் உண்மைத்தன்மைக்காக குளித்தலை நகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றாமல் இருப்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் வருமான வரி செலுத்தியிருந்தால் இ.சி.என்.ஆர். தகுதியுடைய பாஸ்போர்ட் வழங்க இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிறைய பேர் ரூ.100, ரூ.200 வருமான வரி செலுத்தி இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.இந்த பாஸ்போர்ட் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு முதல் வருமான வரிச்சான்று பெற்று, இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் பெறும் முறை மத்திய அரசு உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல அலுவலகத்தில் இதுவரை 650 பாஸ்போர்ட்டுகள் கோர்ட்டு நடவடிக்கைக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, துணை பாஸ்போர்ட் அலுவலர் அசோக்பாபு உடன் இருந்தார்.

No comments:

Post a Comment