அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டம்

அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மாநில மொழிகளில் அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த 2006-ம் ஆண்டு முதல் ரத்து
செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு நடந்தது.
இந்த நிலையில் தற்போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதனிடையே பல்வேறு மாநிலங்கள் NEET எனப்படும் இந்த நுழைவுத் தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன.
இத் தேர்வு இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்து அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில் சிபிஎஸ்இ மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment