சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 29, 2016

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பெருகி வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான
அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நகர்ப்புறங்களில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தெரு விளக்குகளின் மின் கட்டணத்திற்காக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சராசரியாக தங்களது வருவாயில் 25 சதவீதத்தை செலவிடுகின்றன.
எனவே, மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றிட எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக 10 மாநகராட்சிகளிலும், திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட 19 நகராட்சிகள் மற்றும் தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட 18 நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள பாதரச குழல் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சியிலும், எஞ்சிய அனைத்து நகராட்சிகளிலும் உள்ள தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும். இத்திட்டம் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் மற்றும் அரசின் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் இந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மின் கட்டணத்திற்காக செலவிடப்படும் தொகை 35 சதவீதம் வரை குறையும்.
புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான அட்டல் திட்டம் மத்திய மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பெருநகர சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகள் மற்றும் நாகர்கோவில், ராஜபாளையம், ஆம்பூர் மற்றும் ஒசூர் நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 3,229 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். மேலும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 23 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
எனது தலைமையிலான அரசு தூய்மைக்கும், தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. நிதி நிலைமை நலிவுற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.
இதுவரை 80 உள்ளாட்சிகளில் 746 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 878 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 153 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் 36 நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 116 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் ஏழை எளிய நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் குறைந்த செலவில் தங்குவதற்கான இடங்கள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு “குறுகிய கால தங்கும் விடுதிகள்” அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, கடலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 23 குறுகிய கால தங்கும் விடுதிகள் 11 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த விடுதிகளில் மிகக் குறைந்த வாடகை நிர்ணயிக்கப்படும்.
தமிழகத்தில் 5 மாநகராட்சிகள் மற்றும் 49 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 30 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
இந்த ஆண்டு, மேட்டுப்பாளையம் நகராட்சியில்பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் 91 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது தடுக்கப்படும்.
திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் வகையில் இந்த ஆண்டு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,25,352 தனிகுடியிருப்பு கழிவறைகள் 150 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
மேலும், மொத்தம் 2,184 இருக்கைகள் கொண்ட சமுதாய கழிப்பறைகள் 21 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, திடக்கழிவுகளை குறைத்திடும் வழிமுறைகள், திடக்கழிவுகளை மறுசுழற்
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, திடக்கழிவுகளை குறைத்திடும் வழிமுறைகள், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த விழிப்புணர்வு பணிகள் 57 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்த ஈரோடு மாநகராட்சியில் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரினை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்காக மீண்டும் சுத்திகரிக்க 20 எம்.எல்.டி. கொள்ளளவு உள்ள எதிர்மறை சவ்வூடு பரவலுடன் கூடிய மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 62 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் நிறுவப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீரானது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.
இதே போன்று பெரம்பலூர் நகராட்சியில், நெடுவாசல் சாலையில் அமைந்துள்ள 4.20 எம்.எல்.டி. கொள்ளளவு உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரினை, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்காக மீண்டும் சுத்திகரிக்க 2.50 எம்.எல்.டி. கொள்ளளவு உள்ள எதிர்மறை சவ்வூடு பரவலுடன் கூடிய மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் நிறுவப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான் மற்றும் முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்தப் பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற மழைநீர் வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகள் 73 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இதே போன்று கடலூர் நகர்ப்பகுதிகளில் வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 15 வார்டுகளில் 83.67 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் 39 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
நீடித்த நிலையான குடிநீர் பாதுகாப்பு இயக்கம் 2015ஆம் ஆண்டு என்னால் அறிவிக்கப்பட்டு, சென்னை பெருநகர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
மேற்கூரையில் விழும் மழைநீரை சேகரித்தல்; வளாகத்தில் விழும் மழைநீரை சேகரித்தல்; மழைநீர் வடிகாலில் வரும் நீரை சேகரித்தல்; நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல்; சமையல் அறை மற்றும் குளியல் அறைகளில் உபயோகப்படுத்தும் நீரின் அளவை குறைத்தல்; சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பேரூராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் பொருட்டு இந்த ஆண்டு 90,150 எண்ணிக்கையிலான தனிநபர் கழிப்பிடங்கள் 108 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
மேலும், 2,620 இருக்கைகள் உள்ளடக்கிய சமுதாயக் கழிப்பிடங்கள் 17 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தற்போது நான் அறிவித்த திட்டங்களின் பயனாக, நகர்ப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுவதுடன், நகர்ப்புறங்கள் தூய்மையாக விளங்கவும் வழி ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment