புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 26, 2017

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்
செப்டம்பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜேக்டோ, ஜேக்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதியத்தில் உள்ள குறைபாடுகளை களைந்துவிட்டு உடனடியாக 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவும் (ஜேக்டோ), தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் (ஜேக்டோ ஜியோ) தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், பேரணி, அடையாள வேலைநிறுத்தம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஜேக்டோ உயர்நிலைக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக கட்டிடத்தில் நேற்று நடந்தது.
அதைத்தொடர்ந்து ஜேக்டோ ஜியோவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாலை 5 மணி வரை நீடித்த இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்துவது, ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகள் நடத்துவது என்றும் அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஜேக்டோ ஒருங்கிணைப்பாளர் பி.இளங்கோவன், ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக நேற்று மாலை அறிவித்தனர்.

No comments:

Post a Comment