தனியார் பள்ளிக்கு நிகரான தரத்துடன் பூம்புகார் அரசுப் பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 26, 2017

தனியார் பள்ளிக்கு நிகரான தரத்துடன் பூம்புகார் அரசுப் பள்ளி

பூம்புகார் மீனவ கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
தனியார் பள்ளிக்கு இணையான தரத்துடன் விளங்குகிறது. யோகா, கராத்தே வகுப்புகளுடன் ஸ்மார்ட் வகுப்புகளும் தொடங்கப்பட்டு மாணவர்களை தன்னகத்தே ஈர்க்கிறது இந்த அரசுப் பள்ளி.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி, காலணி, புத்தகப்பை, கல்வி உதவித்தொகை, ஜியாமென்டரி பாக்ஸ், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகள், வண்ண பென்சில்கள், விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினிகள், சிறப்பு வகுப்புகள் என்று 32 விதமான வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது. இருப்பினும், தனியார் பள்ளி மோகத்தின் காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தனியார் பள்ளிக்கு இணையான தரத்துடன் அரசுப் பள்ளிகள் இல்லை என்று கூறுவதுடன் ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளை மெட்ரிக் பள்ளி களில் சேர்த்து, நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். அரசுப் பள்ளியை மேம்படுத்த என்ன செய்யவேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. ஆனால், நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மக்கள் யோசித்து அதை செயல்படுத்தியிருக்கின்றனர்.
பூம்புகாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1949-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குழந்தைகள் இங்கு 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அருகில் உள்ள ஊர்களில் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் மீனவர்கள், தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பத் தொடங்கினர். இதனால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு 3 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் புதிதாகச் சேர்ந்தனர். இதையடுத்து பள்ளி, நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை உருவானது.
இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில் பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில், கல்விக்குழு உருவாக்கப்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்துக்கு தேவையானவை என்ன என்று ஆராயப்பட்டது.
அதில், தனியார் பள்ளிகளைப் போன்று யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி, கணினி மூலம் நடத்தப்படும் ஸ்மார்ட் வகுப்புகள், சுத்தமான கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், பள்ளிக் குழந்தைகளை வீடுகளில் இருந்து அழைத்து வர வாகன வசதி ஆகியவற்றைச் செய்து தருவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதற்காக கிராம பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு அதன்மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளி நவீனமயமானது. மேலும், 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையும் கிராமம் சார்பில் வழங்கப் படுகிறது. அரசை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட நடவ டிக்கை காரணமாக, பள்ளியில் இந்த ஆண்டு 57 பேர் புதிதாகச் சேர்ந்தனர்.
இதனால் மாணவர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித் துள்ளது. இதனால் நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தையும் இழக்காமல் மிக நவீன பள்ளியாக உருவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment