ஆங்கில மொழி மோகத்தால் ஏழைகளும் வட்டிக்கு கடன் வாங்கி தனியார் பள்ளிகளில்
தங்கள் குழந்தைகளை சேர்க்கும் காலம் இது. ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்கூட, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
ஆங்கிலச் சொற்களை மாணவர்கள் மிக நேர்த்தியாக உச்சரிக்கும் விதம், ஆங்கில வாக்கியங்களை அவர்கள் வாசிக்கும் வேகம் ஆகியவற்றைப் பார்க்கும் அனைவரும், இந்தப் பள்ளியில் தரமான முறையில் ஆங்கிலக் கல்வி போதிக்கப்படுவதை அறிந்து பாராட்டுகிறார்கள்.
ஆங்கிலத்தை முறையாகப் போதிக்க இந்தப் பள்ளியின் ஆசிரியர் எஸ்.எம்.அன்னபூர்ணா மேற்கொண்ட முயற்சிகள், தமிழகத்தின் ஏராளமான பள்ளிகளுக்கு இன்று முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அவரது ஆங்கில வகுப்பறை நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து வியந்து பாராட்டுகின்றனர்.
கந்தாடு பள்ளியில் மாற்றத்தை உருவாக்கியது எப்படி என்பது பற்றி ஆசிரியர் அன்னபூர்ணா கூறியதாவது:
தொடக்கப் பள்ளி ஆசிரியராக 2004-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். பாடம் நடத்துவது, மாணவர்களுடன் உரையாடுவது என வகுப்பறையில் நுழைந்து, வெளியே செல்வது வரை ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 2009-ல் ஒருநாள் மாணவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதை கேட்க நேர்ந்தது. அவர்கள் மிகச் சரியான உச்சரிப்புடனும், பிழையின்றியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கேட்ட எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த நிகழ்வுதான் திருப்புமுனை என்றுகூட சொல்லலாம்.
பல நாட்களாக, பல மாதங்களாக நான் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி வந்தது மாணவர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. ஆங்கிலம் பற்றிய முறையான பயிற்சி தொடர்ச்சியாக இருந்தால், எப்படிப்பட்ட பின்தங்கிய சமூக பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கும் ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களிலும் தரமான கல்வியை வழங்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அதுமுதல், மிகுந்த ஆர்வத்துடன் கற்பிக்கத் தொடங்கினேன். ஆங்கிலச் சொற்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு ஐபிஏ (International Phonetic Alphabet) எனப்படும் சர்வதேச விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறேன்.
இதற்காக ஒவ்வொரு பாடத்தில் இருக்கும் சொற்களையும் தொகுத்து, அவற்றை எந்த முறையில் ஒலிக்க வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கிறேன். அந்த வகையில் இதுவரை 10 ஆயிரம் சொற்கள் கொண்ட தொகுப்பை உருவாக்கியுள்ளேன்.
ஒவ்வொரு சொல்லையும் பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறையில் காட்சி வடிவில் முதலில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒரு சொல் கொண்ட சிலைடில், அந்த ஆங்கிலச் சொல் முதலில் இருக்கும். அதன் கீழே, அதை எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை (Transcription) இருக்கும். அதன் கீழே அந்த ஆங்கில சொல்லுக்கான தமிழ் அர்த்தம் இடம்பெற்றிருக்கும். அந்த சொல்லோடு தொடர்புடைய ஒரு படம் இருக்கும். கடைசியாக அந்தச் சொல்லை ஒலிக்கும் எனது குரல் கேட்கும்.
ஒவ்வொரு ஆங்கிலப் பாடத்தை நடத்தும் முன்பும், அந்தப் பாடத்தில் உள்ள எல்லா சொற்களையும் இவ்வாறு வாசிப்பதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி தருகிறேன். அதன் பிறகு, அந்தப் பாடத்தின் கருத்துகளை மையமாகக் கொண்டு உரையாடல்களை உருவாக்குகிறோம். உரையாடல்கள் நாடக வடிவம் பெறுகின்றன. நாடகம் முடிந்த பிறகு, பார்த்த காட்சிகள், கேட்ட உரையாடல்கள் பற்றி பல்வேறு கேள்வி – பதில்கள் இடம்பெறும்.
இதெல்லாம் முடிந்த பிறகுதான் பாடப் புத்தகத்தை கையில் எடுத்து, வழக்கமான முறையில் கற்பித்தல் பணி தொடங்கும். ஏற்கெனவே அந்தப் பாடத்தில் இடம்பெற்றிருக்கும் சொற்கள், பாடத்தில் வலியுறுத்தப்படும் கருத்துகள் போன்றவை மாணவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆகியிருப்பதால், அந்தப் பாடத்தின் மூலம் பெறவேண்டிய அடைவுத் திறனை மாணவர்கள் மிக எளிதாகப் பெற்றுவிடுவார்கள்.
இவ்வாறு தனது கற்பித்தல் உத்திகள் பற்றி விவரித்தார் அன்னபூர்ணா. அவர் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் செலவு செய்து, பள்ளியில் வண்ணமயமான ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எங்கள் வகுப்பறை நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்களை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் வெளியிட்டேன். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில்கூட இவை வைரலாகப் பரவும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஓரிரு நாட்களிலேயே பாராட்டுகள் குவிந்தன. ஏராளமானோர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
இதனால் கிடைத்த ஊக்கத்தில், மாணவர்களுக்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் ஸ்மார்ட் வகுப்பறையின் அவசியம் பற்றி உணர்ந்துகொண்டேன். கடந்த மார்ச் மாதத்தில் பள்ளியின் ஒரு கட்டிடத்தில் வண்ணம் அடித்து, ஓவியங்கள் வரைந்து அழகாக்கினோம். தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் போர்டு, புரொஜக்டர், வட்ட வடிவ மேஜைகள், நாற்காலிகள் போன்றவற்றை வாங்கி, அழகான வகுப்பறையை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் பணியைப் பாராட்டும் விதமாக ஏராளமானோர் பல உதவிகளை செய்கின்றனர். அவர்கள் உதவியோடு மாணவர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறோம்’’ என்றார்.
பள்ளியின் வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் எஸ்.பிரேமலதா கூறும்போது, ‘‘கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் தற்போது 174 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த ஆண்டு 5-ம் வகுப்பு முடித்து 25 மாணவர்கள் வெளியே சென்றனர். 48 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்களில் 1-ம் வகுப்பு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி 4, 5-ம் வகுப்புகளிலும் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.
மரக்காணம் ஒன்றியத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து வகுப்பறை சூழலையும், கற்பிக்கும் உத்திகளையும் நேரில் பார்த்துச் செல்கின்றனர். தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி, பிற பாடங்களையும் இதேபோன்று ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். பள்ளியின் ஒரு கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்பறை செயல்பட்டாலும், பிற கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகவும், இடியக் கூடிய அபாயத்திலும் உள்ளன. இந்தக் கட்டிடங்களை இடித்துவிட்டு, உரிய காலத்தில் புதிய கட்டிடங்களை அரசு கட்டிக் கொடுத்தால், இந்தப் பள்ளியின் வெற்றிப் பயணம் மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
பள்ளியின் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிய: 99942 19325 மற்றும் 94433 60955.
No comments:
Post a Comment