வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அலுவலர்கள், அந்த நாட்களுக்கான சம்பளத்தை பெறுவதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத் துறை நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, தீபாவளி அன்றும் 2 மாதங்களில் சனிக்கிழமைகளிலும் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த மாதம் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின்போது, அந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் முதல்வரின் சமாதானத்தை ஏற்று செப்.7-ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றொரு பிரிவினர் செப்.7 முதல் 15-ம் தேதி வரை பணிக்கு செல்லாமல் போராடினர். அதன்பின், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ஏற்று அனைவரும் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த செப்.7 முதல் 15-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை பெற, சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்ற வேண்டும் என தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பியது.
அந்தக் கடிதத்தில், ‘கடந்த செப்.7 முதல், 15 வரையிலான நாட்களில் சனி, ஞாயிறு தவிர 7 வேலை நாட்கள் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக, அக்டோபர் 14, 21, 28, நவம்பர் 4, 11, 18 ஆகிய சனிக்கிழமைகளிலும் அக்டோபர் 18 (தீபாவளி) அன்றும் பணியாற்ற வேண்டும். அப்போதுதான், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நாட்களுக்கான ஊதியத்தை ஈடு செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட துறைகள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு சமீபத்தில் அலுவலக நடைமுறை கடிதம் அனுப்பியுள்ளது. இதில், பணியாற்ற வேண்டிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்.18-ம் தேதி தீபாவளி பண்டிகையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட முடியாமல்,அன்று பணிக்கு வரவேண்டிய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
No comments:
Post a Comment