அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய தொகை விபரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகை 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.இதன்படி அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஸ்) சேர்க்கப்பட்டனர்.
இதற்காக ஒவ்வொரு பணியாளர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன்பங்காக செலுத்துகிறது. இருப்பினும் ஓய்வு பெற்றோர், பணி நீக்கம் செய்யப்பட்டோர், கட்டாய ஓய்வு பெற்றோர், இறந்த ஊழியர்கள் பலருக்கும் இத்தொகை வழங்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையே இருந்து வந்தது.இதனால் இத்திட்டத்தின்மீது ஊழியர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இத்தொகை இலவச பேன், மிக்சி, கிரைண்டர் வழங்குவதற்காக செலவிடப்பட்டு விட்டது. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் இத்தொகை செலுத்தப்படவே இல்லை. மாதம் 10 சதவீத சம்பளத்தை இழந்து வந்ததுடன், தங்களிடம் பிடித்தம் செய்த பணம் என்ன ஆயிற்று என்று தெரியாமல் ஊழியர்களிடையே பெரும் குழப்பமும் நிலவி வந்தது.
இந்நிலையில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கருவூல கணக்குத்துறை, அரசுதகவல் தொகுப்பு விபர மையத்தின் உதவியுடன் இக்கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.கடந்த மார்ச் மாத நிலவரப்படி சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி, கல்வி நிறுவன பணியாளர்களின் பங்களிப்புத்தொகை, அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. கணக்குத்தாள் அரசு இணையத்தில் ஒவ்வொரு பணியாளரும் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர்கள் 3,288 பேருக்கு வழங்க வேண்டிய தொகை 125.24 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment