`12 வருஷ துயரத்தை 10 நிமிஷத்துல போக்கிட்டார்!' - ஏழை பெற்றோரை நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 22, 2019

`12 வருஷ துயரத்தை 10 நிமிஷத்துல போக்கிட்டார்!' - ஏழை பெற்றோரை நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்

`12 வருஷ துயரத்தை 10 நிமிஷத்துல போக்கிட்டார்!' - ஏழை பெற்றோரை நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை, சின்ன பாப்பா தம்பதி. கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கோவிந்தராஜ் (16), மாரி ( 8) ஹாசினி (2) என மூன்று குழந்தைகள். இதில், கோவிந்தராஜ் பிறவியிலேயே இதய நோயினால் பாதிப்படைந்தவர். இவருக்கு 4 வயது இருக்கும்போது, திடீரென்று கை, கால் வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கோவிந்தராஜைப் பரிசோதனை செய்த மருத்துவர், `பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் செய்ய லட்சக்கணக்கில் செலவு ஆகும்' என்று கூறியுள்ளார். குடும்ப வறுமை சூழல் காரணமாக கோவிந்தராஜுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல், 12 ஆண்டுகளாக ஏழுமலை குடும்பமே வேதனையில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தத் தகவல், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு இந்தத் தகவல் கொண்டுசெல்லப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் உதவியால், சென்னை அமைந்தகரையில் உள்ள `எம்.ஜி.எம். ஹெல்த் கேர்' என்ற தனியார் மருத்துவமனையில், தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்வதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர். கூடவே, ஏழுமலை குடும்பத்தினரின் செலவுக்கு ரூ.10,000-ம் வழங்கியது மாவட்ட மக்களை நெகிழவைத்துள்ளது.
ஏழுமலையிடம் பேசினோம். ``என் மகனுக்கு இதய நோய் இருக்குனு சொல்லிட்டாங்க. எங்களுக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டுடுச்சு. எறும்புக்குக் கூட துரோகம் செய்யாத இந்த 4 வயசு குழந்தைக்கு இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டு இருக்கேனு மனசு ஒடஞ்சி போய்ட்டோம். என் பொண்டாட்டியும் கொஞ்ச நாள் பித்துப் புடிச்சமாதிரி ஆயிட்டா. எனக்கும் என்ன பண்றதுனே தெரியல, என் மகனுக்கு ஆபரேஷன் பண்ற அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல. விவசாய கூலிக்குத்தான் போறேன்.
ஏழுமலை உட்பட 29 குடும்பத்தினருக்கும் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள், சாலை, மின்சாரம், தெருவிளக்கு என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
மாவட்ட கலெக்டர் கந்தசாமி
ஆனாலும், நான் என்னால முடிஞ்ச அளவுக்கு, என் உடம்புல சத்து இருக்கிற வரைக்கும் என் மகன பார்த்துப்பேன். அவனுக்கு எப்பலாம் மூச்சு விட முடியாம கஷ்டப்படுறானோ அப்போ எல்லாம் என் ஈரக்கொலையே நடுங்கிடும். அவனுடைய நோயை குணப்படுத்துற அளவுக்கு என்கிட்டப் பணம் இல்லனாலும், ஒரு குறையும் காமிக்காம அவன சந்தோஷமாதான் பார்த்துக்கிட்டு வர்றேன். அவன எப்படியாவது காப்பத்தியே ஆகணும்னு இந்த 12 வருஷமா அங்க இங்க கடன் வாங்கி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் ஊசி போட்டுக் காப்பாத்தினு வரேன்.
என் மகன் உசுர நீதான் காப்பாத்தணும் சாமி... என்று, 12 வருசமா ஒவ்வொரு கோயிலா எறி இறங்கிட்டேன். எந்த சாமியும் கை கொடுக்கல. அப்போதான், ஒரு பத்திரிகையாளர் சொன்னாரு, `இப்போ வந்திருக்கிற கலெக்டர்கிட்ட மனு கொடுங்க, அவரு உதவி பண்ணுவாருனு.’ அவர் சொன்ன மாதிரியே, பத்தே நிமிஷத்துல தெய்வம் போல வந்து எங்க கஷ்டத்தைப் போக்கிட்டார் கலெக்டர். இப்ப என் மகன் உசுர காப்பாத்த எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு குடுத்துட்டார். சென்னையில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போனதும், அங்க இருக்கிற டாக்டரும், `நோயை குணப்படுத்திடலாம்’னு சொன்னார்" எனப் பேசிக் கொண்டிருக்கும்போது கலங்கினார் ஏழுமலை..
மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். ``குடும்ப வறுமை காரணமாகப் பெற்றோர்கள் இதுவரை அவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத ஏழ்மையான சூழ்நிலையில் இருந்துள்ளார்கள். தற்போது கோவிந்தராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலை குடும்பத்தினர் வசிக்கும் தண்டம்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில், அப்பகுதியில் 29 குடும்பங்கள் மிகவும் சேதமடைந்த வீடுகளில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்துவருவது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை உட்பட 29 குடும்பத்தினருக்கும் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள், சாலை, மின்சாரம், தெருவிளக்கு, குடிதண்ணீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அடுத்த 4 மாதங்களில் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் இயல்பாக

No comments:

Post a Comment