ஆசிரியர்கள் நாள் விழாவில் ஆசிரியர்களுக்குத் தனி நூலகம் திறப்பு - அசத்திய தேவகோட்டை, தே பிரித்தோ பள்ளி
செப்டம்பர் – 5
தேவகோட்டை, தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்-அலுவலர்களுக்கான ‘ஆனந்தா அறிவகம்’ என்னும் தனி நூலகத்தைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்திரு.பெ.ஆரோக்கியசாமி திறந்து வைத்தார். 'மாதம்தோறும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாசிப்பு அனுபவத்தை நூல் மதிப்புரையை படைப்பரங்கம் வழியாக ஆனந்தா அறிவகம் செயல்படுத்த உள்ளதாகவும், படித்துமுடித்த ஆசிரியர்களைவிட தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிற ஆசிரியர்களே இன்றைய அவசியத்தேவை. ஆசிரியர்களையும் அலுவலர்களையும் படிப்பாளிகளாக மட்டுமல்லாமல் படைப்பாளிகளாகவும், தங்கள் மதிநுட்பத்தைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஆசிரியர்கள் அறையில் திறக்கப்பெற்றுள்ள இந்த 'ஆனந்தா அறிவகம்' நிச்சயம் பயன்படும்' எனத் தெரிவித்தார்.
பள்ளியின் அதிபர் மற்றும் தாளாளர் அருட்திரு. ம.வின்சென்ட் அமல்ராஜ் விழாவிற்குத் தலைமை வகித்து ஆசிரியப்பெருமக்களை வாழ்த்திப் பேசினார். கும்பம் அச்சக உரிமையாளர் முன்னாள் மாணவர் பா.சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கிப் பேசினார். அனைத்து ஆசிரிய – அலுவலர்களும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையோடு விழா மேடைக்கு அழைத்துவரப்பெற்று நல்லாடை அணிவித்து பாராட்டப் பெற்றனர்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தொடக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பான தனித்திறன் பங்கேற்பிற்காக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர்,
மாண்புமிகு.தமிழகத் துணை முதலமைச்சர்,
மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பாராட்டு பெற்ற இப்பள்ளியின் வீரமாமுனிவர் கலை- இலக்கிய மன்ற மாணவர்கள் பெர்னால்டு, அசாருதீன் ஆகியோர் பரிசளித்து கௌரவிக்கப்பெற்றனர். மேலும் அறிவியல் துறை, விளையாட்டுத்துறை சாதனை மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பெற்றன.
கடந்த வாரம் ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் வின் நியூஸ் தொலைக்காட்சியின் ‘சிறந்த ஆசிரியர் விருது’, குமுதம் சிநேகிதி பத்திரிகையின் ‘கனவு ஆசிரியர் விருது’ பெற்ற பள்ளியின் பட்டதாரித் தமிழாசிரியர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ் விழாவில் பாராட்டுப் பெற்றார்.
மாணவர்களின் பேச்சு, கவிதை வாசிப்பு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் க.வீரவிஸ்வா வரவேற்றார். மு.பிரவீன்ராஜ் நன்றி கூறினார். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ப.அருண்இ ஜ.பெர்னால்டு ஜார்ஜ் ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். ஆசிரியர்கள் நூலகத்திற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அதிபர் அருட்திரு. ம.வின்சென்ட் அமல்ராஜ், ஆசிரியர் முனைவர்.ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ், நூலகர் வளன் ஆரோக்கிய சேவியர் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment