கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை: ஆசிரியர் பணி தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 27, 2019

கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை: ஆசிரியர் பணி தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்போர், கம்மல், மூக்குத்தி, கொலுசு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியில், 2,144 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், வரும், 27, 28, 29ம் தேதிகளில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 30 மாவட்டங்களில், 154 மையங்களில், தேர்வறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை, 1.22 லட்சம் பெண்கள், 3,389 மாற்று திறனாளிகள், எட்டு திருநங்கையர் உட்பட, 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர். மொத்தம், 17 பாடப்பிரிவுகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், லதா கூறியதாவது:
● முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில், 150 மதிப்பெண்களுக்கு, 180 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படும். ஒரே நேரத்தில், 33 ஆயிரம் கணினிகள் பயன்படுத்தப்படும். பாதுகாப்பான, வேகமாக இயங்கும், 'சர்வர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
● தேர்வர்களை ஆறு பிரிவுகளாக பிரித்து, மூன்று நாட்கள், காலை மற்றும் பிற்பகல் என, தேர்வு நடக்கிறது. சர்வதேச அளவிலான கணினி வழி தேர்வில் பின்பற்றப்படும், அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செய்துள்ளோம்
● ஒவ்வொரு தேர்வருக்கும், குறிப்பிட்ட இடைவெளி இருக்கும். ஒரு தேர்வரின் வினாத்தொகுப்பு, இன்னொரு தேர்வருக்கு இருக்காது. காப்பி அடிப்பது, பதில் கேட்டு எழுதுவது போன்ற முறைகேடுகளுக்கு வழியில்லை. பதிவு மூப்பின்படி, ஆன்லைன் வழியாக, தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன
● தேர்வில் கேள்விகளை வரிசையாகவோ, முன், பின்னாகவோ தேர்வு செய்து, விடை எழுதலாம். தேர்வு நேரம் கணினியில் தானியங்கி முறையில் செயல்படும். மூன்று மணி நேரம் முடிந்ததும், தேர்வர்களின் விடைகள் தானாகவே உள்ளீடு செய்யப்படும்
● தேர்வு முடிந்த பின், ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடும் நாளில், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படும். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும். பெரிய பொத்தான், உலோக பொருட்கள் அடங்கிய, உடைகளை அணிய வேண்டாம்
● தலையில் கிளிப், கழுத்து நகை, ஆபரணம், கம்மல், மூக்குத்தி, மோதிரம், நெற்றிச்சூடி, வளையம், கொலுசு உள்ளிட்ட எந்த ஆபரணமும் அணிந்து வரக்கூடாது. மெட்டிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்
● தேர்வு மையங்களின் பாதுகாப்பு கருதி, போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, தேர்வர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர்கள், அறிவொளி, உமா, இணை இயக்குனர், நரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'பயோமெட்ரிக்' பதிவு:
ஹால் டிக்கெட், அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். கைக்குட்டை, தண்ணீர் பாட்டிலுக்கு தடை இல்லை. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். ஷூ, சாக்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மின்னணு பொருட்களுக்கு அனுமதியில்லை. ஒவ்வொரு தேர்வரும், பயோமெட்ரிக்கில் விரல் ரேகை வைத்த பின்பே உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்படுவர். தேர்வு நேரம் முடியும் வரை, தேர்வர்கள் வெளியே வர முடியாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment