கனவு ஆசிரியர் விருதுக்கு மாவட்டத்திற்கு 6 பேரை தேர்வு செய்யலாம் என்று அது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மற்றும் குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டு சான்றுடன் ₹10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் ஆசிரியர்களை தேர்வு செய்தல் தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு விளக்கி பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2018-19ம் ஆண்டிற்கு கனவு ஆசிரியர் விருது திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர், கணினி, அலைபேசி, திரை ஒலி, ஒளி அமைப்பான், இணையதள பயன்பாட்டு பலகை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தியும், அறிவியல் தொழில்நுட்பத்தையும், மாறி வரும் கற்றல், கற்பித்தல் தொழில்நுட்பத்தையும் கையாண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை அறிந்துகொள்ளுதல், வினவுதல், பயன்படுத்துதல் மற்றும் புதியன படைத்தல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும், பள்ளி இணை செயல்பாடுகளான இசை, ஓவியம், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்சிறார் செஞ்சிலுவை, மாநில மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளுதல் மற்றும் பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்கள் நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். பள்ளியில் நூலகத்தை திறம்பட செயல்படுத்தி பள்ளி படிப்பை கடந்து மாணவர்களிடையே பொதுவான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த கூடியவராகவும், அவர்களின் ஒழுக்க திறனை மேம்படுத்துபவராகவும் இருக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கி பள்ளி கட்டமைப்பு வசதிகளை பெருக்கி, மரங்கள் நடப்பட்டு, பசுமை சூழல் நிறைந்த பள்ளி வளாகம் சுத்தமாக பராமரித்து அதனால் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல், தன்னுடைய தனி திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவி புரியக்கூடியவராகவும், பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே சுமூகமான கற்றல், கற்பித்தல், சூழ்நிலை நிலவ ஒத்துழைப்பு அளிக்க கூடியவராகவும் இருத்தல் வேண்டும். ஐந்தாண்டுகள் பணி அனுபவம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர், மாணவர்களை உளவியல் அடிப்படையில் அணுகி வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆசிரியர் பணியிலும், பள்ளி துணை ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட வளமைய கருத்தாளர், வட்டார வளமைய ஆசிரியர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பகுதிநிர்வாக பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்கு பொருந்தாது.
மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பரிசீலனையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்கள் வீதம் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதனை அக்டோபர் 15ம் தேதிக்குள் மாநில தேர்வுக்கு குழுவுக்கு அனுப்பிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கனவு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றுடன் ₹10 ஆயிரம் வீதம் ஊக்கபரிசு வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment