🆂🆄🆁🅿🅻🆄🆂 🆃🅴🅰🅲🅷🅴🆁🆂.. (உபரி ஆசிரியர்கள்..)
கல்வித்துறையில் சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை உபரி ஆசிரியர்கள்..
மாணவர்களின் விகிதத்திற்கு அதிகமாக ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தால், அவர்களை உபரி ஆசிரியர்கள் (Surplus teachers) என்று பெயரிட்டு அவர்களை வேறு பள்ளிக்கு அவர்களது பணியிடத்தோடு சேர்த்து வேறுபள்ளிக்கு மாற்றுவதை பணி நிரவல் (Deployment) என்று அழைக்கப்படுகிறது..
இதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது, ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அந்த ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகம் இருக்கக்கூடிய வேறு பள்ளிக்கு அரசு மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தோன்றுவது இயல்பு..
இதையும் தாண்டி, ஒரு பள்ளியில் Surplus teachers இருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட உடன், சில அறிவுஜீவிகள் வரிந்து கட்டிக் கொண்டு, ஏன் அந்தப் பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் வந்தது?
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால்..
மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைந்தது?
ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை பார்க்காததால்..
என்று..
இவர்களே.. குற்றம் சாட்டி, இவர்களே விசாரித்து, இவர்களே தண்டனையும் விதித்துவிடுவார்கள்..
உண்மை என்ன?
சுதந்திரத்திற்கு முன்பு, கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் எட்டாத கனியாக இருந்தது.
எல்லா தரப்பு மக்களும் உயர வேண்டும் என்றால்.. அவர்களுக்குக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார்..
கிராமம் எங்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட அவர் வழிவகை செய்தார்..
பள்ளிக்கூடங்களுக்கு பராமரிப்பு மான்யம் (Maintainance grant) கொடுத்தார்.
கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தார்..
அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கற்பிப்பு மானியம் (Teaching grant) கொடுத்தார்..
ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்களுக்கு மேல் போனால் இரண்டாவது ஆசிரியரை நியமித்துக் கொள்ளலாம் என்று மாணவர் -ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1 :20 என நிர்ணயம் செய்து கொடுத்தார்..
இதன்படி ஒவ்வொரு 20 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர்..
இது அரசாணை எண் 250 யிலும் பின்னர் வந்த அரசுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன.
இதன்படி ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் இருந்தால்.. அங்கே 50 ஆசிரியர் பணியிடங்கள் கொடுக்கப்பட்டன..
எல்லாம் சரியாகத்தான் இருந்தது..1991 வரை..
1991ம் ஆண்டு சங்கரசுப்பையன் என்ற IAS அதிகாரி கல்வித்துறையின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்..
எல்லாம் தலைகீழாக மாறியது..
சில கல்வி நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல், ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படவில்லை என்று கேட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 1:20 என்ற விகிதாச்சாரத்தின்படி அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவினைப் பெற்றனர்.
அரசு அந்த உத்தரவின்படி செயல்படாததால், கல்வி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கல்வித்துறை செயலாளர் மீது தொடர்ந்தன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்தும் தப்பிக்க வேண்டும்.. அதேநேரத்தில் அந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை வழங்கவும் கூடாது என்ற எண்ணத்தில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்த கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை 1 : 50 என நிர்ணயம் செய்து அரசாணை எண் 340 யைப் பிறப்பித்தது..
அதாவது அந்தக் கல்வி நிறுவனங்களில் மட்டும் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்..
வேடிக்கை பாருங்கள்..
அந்தப் பள்ளியில் 1000 மாணவர்கள் இருந்தால்.. 1 : 20 விகிதாச்சாரத்தின்படி 50 ஆசிரியர்கள் அங்கு இருந்திருப்பார்கள்.., ஆனால் புதிய அரசாணையின்படி அந்தப் பள்ளியில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 : 50 படி, 20 மட்டும்தான்..
எஞ்சிய 30 ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர்..
அவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றால், அவர்கள் கூடுதலாக 1500 மாணவர்களை சேர்த்தாக வேண்டும்..
இல்லையென்றால் அவர்கள் பணியிடங்களை வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்..
விழுப்புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும்..
நாகர்கோவிலிலிருந்து விழுப்புரத்திற்கும் அவர்கள் போக வேண்டியதாக இருக்கும்..
அதிர்ந்து போன.. கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு மட்டும் 1 : 50 என நிர்ணயம் செய்தது தவறு என்று கேட்டு, நீதிமன்றத்திற்குப் போக,
தமிழகம் முழுவதும் எல்லா பள்ளிகளுக்கும் 1 : 40 என்ற புதிய விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்பட்டு, 1997 ல் அரசாணை எண் 525 பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, 1000 மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் 50 ஆசிரியர்கள் ஏற்கெனவே பணியாற்றி வந்தால், இனி 25 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும்.. மீதியுள்ள 25 ஆசிரியர்கள் வெளியேற வேண்டும்.. அல்லது அவர்கள் கூடுதலாக 1000 மாணவர்களை அந்தப் பள்ளியில் சேர்த்தாக வேண்டும்..
ஒன்றாம் வகுப்பில் 20 மாணவர்களுக்குப் பதிலாக புதிதாக 40 மாணவர்கள் சேர்க்க வேண்டும் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது..
ஆனால் நான்காம் வகுப்பில் 20 மாணவர்களுக்குப் பதிலாக 40 மாணவர்களை எப்படி சேர்க்க முடியும்? இன்னொரு பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் 20 மாணவர்களை இங்கே இழுத்துதானே சேர்க்க முடியும்? இடை வகுப்புகளில் ஒரு பள்ளியிலிருந்து மாணவர்களை இழுக்க முடியுமா?
அப்படியேச் சேர்த்தாலும்.. அந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பில் இருந்த 20 மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்யம் என்றானால்தானே அது சாத்தியம்?
இன்னும் புரியும் வண்ணம் பார்க்கலாம்..
தமிழகம் முழுவதும், 10000 பள்ளிகள் இருக்கிறது என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம்..
அங்கு பள்ளிக்கு 500 மாணவர்கள் வீதம் 50,00,000 மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்..
1:20 என்ற விகிதாச்சாரப்படி, 2,50,000 ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள்..
ஆனால்.. அதை 1:40 என்று மாற்றினால்.. அதே 2,50,000 ஆசிரியர்களுக்கு தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி..
எனில்.. அந்த கூடுதலான 50,00,000 மாணவர்களை எங்கிருந்து பெறுவது?
பக்கத்து மாநிலத்திலிருந்தா?
அல்லது வேறொரு நாட்டிலிருந்தா?
அபத்தமாக இருக்கிறதல்லவா?
அந்த அபத்தத்தைத்தான் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன..
அந்த கூடுதல் மாணவர்களை எங்கிருந்தும் பெற முடியாததால், 1,25,000 ஆசிரியர்களை உபரி ஆசிரியர்கள் என்ற பட்டியலில் வைத்து அழகு பார்த்து, அவர்களை அலைக்கழித்து வருகிறோம்..
ஒரு கல்வி அமைச்சருக்குக்கூட இது நடைமுறையில் எப்படி சாத்தியம் என்பது இதுவரை புரியவேயில்லை..
அல்லது புரிந்தாலும்.. பரவாயில்லை என்று மௌனகுருக்களாய் கடந்து போய் விட்டார்கள்..
இதுதான் தமிழகமெங்கும் உபரி ஆசிரியர்கள் வந்த கதை..
இப்பொழுது அரசு அரசாணை 165 மூலம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது..
உபரி ஆசிரியர்கள் அனைவரையும், மாணவர் எண்ணிக்கை அதிகமிருக்கும் அரசுப் பள்ளிக்கோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிக்கோ மாற்றுவது என்றும்.. 1991 ம் ஆண்டிலிருந்து இது போல் மாற்றப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்பக்கூடாது என்றும் .. பணி நிரவல்கள் முடியும் வரை, யாரும் புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறது..
இவர்கள் திருநெல்வேலியில் இருக்கும் உபரி ஆசிரியர்களை எந்த மாவட்டத்திற்கு மாற்றப் போகின்றார்கள்?
எந்த மாவட்டத்தில் உபரி ஆசிரியர்களே இல்லாமல் இருக்கப் போகின்றார்கள்?
இவர்களின் நோக்கம்.. ஆசிரியர்களைப் பணிநிரவல் செய்வதல்ல..காலப் போக்கில் ஒட்டு மொத்தமாக ஆசிரியர்கள் பணியிடங்களையே ஒழித்துக் கட்டுவதன் மூலம் இலவசக் கல்வியையே அழித்து, கல்வியை பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப் போவதுதான்..
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து, அரசுப் பள்ளிகளோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளோ இங்கு இருக்காது..
பணம் கட்டிப் படிப்பைக் கொடுக்கும் கல்வித்தந்தைகள் வசம் மட்டுமே இனி பள்ளிகள் இருக்கும்..
இதுதான் காமராஜருக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு..
No comments:
Post a Comment