அண்மைக் காலமாகத் தமிழகப் பள்ளிக்கல்வியில் காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு புதிய மாற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருவது அறியத்தக்கது. இணையவழியிலான செயல்முறைகளால் காலவிரயமும் தாள் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் முறையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படுவது சிறப்பு. இதன்மூலம் தாள் பயன்பாட்டுக்காகப் பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவது ஓரளவு தடுக்கப்படும் என்று நம்பலாம்.
மேலும், இணையவழியில் பதியப்படும் தகவல்கள் அழியாமல் நீண்ட காலம் இருக்கும். தேவைப்படும் நேரங்களில் எங்கிருந்தும் பெறவும் அனுப்பவும் இயலும். இதன்காரணமாகப் பல்வேறு துறைகளில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பதிவேடுகள் மற்றும் கோப்புப் பயன்பாடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு ஊழியர்களின் பணிப்பளு எளிதாக்கப்படும் நிகழ்வுகள் நாடோறும் நடைபெற்று வருகின்றன.
அதேவேளையில், ஆசிரியர் தொழில் எளிதல்ல. படிவங்களோடும் பதிவேடுகளோடும் மட்டும் பராமரிப்பது அவர்களது வேலையாகாது. உயிரும் உணர்வும் கோடானு கோடி கனவும் நிறைந்த பள்ளிவயதுக் குழந்தைகளின் உடல், உள்ள மற்றும் சமூக ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அரும்பாடு படவேண்டிய சமுதாயப் பொறுப்பும் கடமையும் ஏனையோரைவிட நிரம்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களின் தலையாயப் பணி என்பது கற்பித்தல் செயலாகும். மற்றவை அனைத்தும் அவர்களுக்கு இரண்டாம்பட்சமே எனலாம்.
ஆனால், அண்மைக்கால நடப்புகள் அப்படியாக இல்லை. பதிவேடுகள் பராமரிப்புக்காகவும் படிவங்கள் நிரப்புவதற்காகவும் இவற்றையே இணையம் மூலமாகப் பதிவேற்றங்கள் மேற்கொள்ள போராடுவதற்காகவும் அலுவல் மற்றும் அலுவல் சாரா நேரங்களை அதிகம் செலவிடும் போக்குகள் மிகுந்துள்ளன. பள்ளியின் முதன்மைக் குறிக்கோளாகவும் இலக்காகவும் காணப்படும் கற்றல், கற்பித்தல் நிகழ்வு பல நேரங்களில் நடைபெறாமலேயே கழிவது என்பது ஏற்பதற்கில்லை.
தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்படும் கவர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பள்ளிகளில் கொட்டி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக ஆசிரியப் பெருமக்களை நிகழ்ச்சி நடத்துபவராகவும் நிழற்படங்கள் சேகரிப்பவராகவும் அவற்றை உடனடியாக இணையத்தில் பதிவேற்றங்கள் செய்பவராகவும் உருமாற்றி வரும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. தேசியக் கலைத்திட்டம் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஆகியவற்றில் இவையனைத்தும் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. வெற்று விளம்பரங்களுக்கு வகுப்பறைகள் தக்க இடமல்ல. ஆசிரியர்கள் என்பவர்கள் இருபெரும் அரசுகளின் விளம்பர தூதுவர்கள் அல்லர். அவர்களுக்கென பல சமூகப் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அவற்றை செவ்வனே ஈடேற வைக்கவே போதுமான நேரம் இல்லாத சூழலில் இதுபோன்ற தொடர் இடையூறுகள் வெகுவாக மாணவர்கள் நலனைப் பாதிக்கும்.
மாணவர்களைவிடவா பதிவேடுகளும் பதிவேற்றங்களும் இன்றியமையாதது? உயிரோட்டமிக்க வகுப்பறைகளில் கற்றலையும் கற்பித்தலையும் சாகடித்துவிட்டு படிவங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தால் கல்வி எப்படி உருப்படும்? இதில் கொடுமை என்னவென்றால் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை ஒன்று. அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் இரண்டு. இரண்டும் வேறுவேறல்ல. ஒன்றேதான்!
காட்டாக, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லாதப் பாடப்புத்தகங்கள் பெற்று வழங்கப்பட வேண்டும் என்பது பணி. இந்தப் பணியைச் செம்மையாக நிறைவேற்றி முடித்ததும் ஆசிரியர்கள் உரிய பதிவேட்டில் வகுப்புவாரியாகப் பெயர் பட்டியல் தயாரித்து, மாணவர்களிடம் கையொப்பம் பெற்று, சுருக்கப் பட்டியல் உருவாக்கிப் பராமரிக்கவும் உயர் அலுவலர்கள் மேற்கொள்ளும் பார்வைகளின்போது சமர்ப்பிக்கவும் பணிக்கப்படுவது ஒருபுறம்.
மற்றொரு புறத்தில் இதே பணியினை இதேபோல் தக்க தரவுகளைக் கையில் வைத்துக்கொண்டு இணைய இணைப்புக்காக அலைந்து திரிந்து ஊன் உறக்கம் தொலைத்து மன அமைதி இழந்து அதற்கென சிறப்பாக வடிவமைத்துத் தந்திருக்கும் இணையதளத்திற்குச் சென்று மணிக்கணக்கில் நேரம் செலவழித்து அத்தனையும் ஒழுங்காகப் பதிவேற்றம் செய்து முடிக்க அறிவுறுத்துவது வேடிக்கையாக உள்ளது.
இந்த இரட்டைச் சவாரியினை தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளித் தலைமையாசிரியர்கள் சற்றேறக்குறைய 50 க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர், ஆசிரியர் சார்ந்த பதிவுகளை மேற்சுட்டிக்காட்டப்பட்ட இருவேறு வழிகளில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
தற்போது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த அனைத்துத் தகவல்கள் தொகுப்புக் கிடங்காகக் கல்வித் தகவல் மேலாண்மை மையம் (EMIS) உள்ளது. பள்ளி சார்ந்த நிழற்படங்கள், ஆசிரியர், மாணவர் சார்ந்த வருகைப்பதிவுகள், பள்ளி முழு விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் முழுத் தகவல்கள், மாணவர் கல்விசார் விவரங்கள், அரசின் நலத்திட்ட கேட்பு மற்றும் வழங்கல் பதிவுகள், அனைத்து வகையான பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது உள்ளது சிறப்பு வாய்ந்தது.
ஏறத்தாழ பல்வேறு அலமாரிகளிலும் பொருள் வைப்புகளிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு துர்நெடியடிக்கும் பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மீதான தொடர் பராமரிப்புகள் மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகள், திடீர் விபத்துகள், கரையான் உள்ளிட்ட பூச்சிகள், மடித்து மக்கிப் போகும் வினைகள் ஆகியவற்றிலிருந்து விட்டு விடுதலையாகும் உணர்வினை எமிஸ் ஆசிரியர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு தலைமையாசிரியரும் பள்ளி இருப்புப் பதிவேட்டில் உள்ளவற்றைப் பயபக்தியுடன் பாதுகாத்து ஒப்படைத்துவிட்டுப் பழுதில்லாமல் பணிநிறைவு பெறவேண்டும் என்கிற பய உணர்வுடன் இருந்துவரும் அவலநிலைக்கு இது முற்றுப்புள்ளி வைப்பதாக இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த நிலையில் பழைய நடைமுறைகளைக் காலமாற்றத்திற்கேற்ப களைய முன்வராமல் விடாப்பிடியாகப் பதிவேட்டுப் பராமரிப்பு முறையையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது நல்லதல்ல. பதிவேற்றப் பராமரிப்பு முறைக்கு ஆசிரியர்கள் அனைவரையும் பழக்கிய பின், அந்த புதிய நடைமுறைகளை வலுப்படுத்துவதும் முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் உயர் அலுவலர்களின் செயல்முறைகளாக இருக்க வேண்டுமேயொழிய செல்லரித்துப் போகும் பழம்நடைமுறைகளைக் கைவிடாமல் ஆசிரியர்களைக் கிடுக்கிப்பிடி போடுவது தான் மிகுந்த மன அழுத்தத்தை அலுவலகப் பணிகள் தருவதாக ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர்.
இந்த மன அழுத்தம் கற்பித்தலைப் பாதிக்கிறது. கற்பித்தல் நிகழாத போது கற்றல் எங்கே நிகழும்? தரமான கற்பித்தலும் நல்ல கற்றலும் இல்லாத பள்ளிகளை யார் தாம் தேர்ந்தெடுப்பர்? கற்றலடைவின் பெரும் வீழ்ச்சிக்கும் அடிப்படைத் திறன்களில் போதிய அடைவின்மைக்கும் அரசுப்பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையின்மைக்கும் இந்தப் பணிச்சுமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை காலம்காலமாகக் கோலோச்சிய, ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டிய தமிழ்நாட்டு நல்ல, தரமான, பயனுள்ள, வாழ்க்கைக்குதவும் கல்வி முறையினை ஆசிரியர் தம் கற்பித்தல் திறனால் மேம்படுத்த நல்வாய்ப்புகள் உருவாக்கித்தர முன்வருதல் இன்றியமையாத ஒன்று.
பல்துறை வித்தகரான ஆசிரியப் பேரினத்தை, கற்பித்தலை மூட்டைக்கட்டி வைக்கச்சொல்லி வெற்று எழுத்தர்களாகவும் கணினித் தட்டச்சுச் செய்பவராகவும் மாற்றி வருவது சமுதாய வளர்ச்சிக்கும் நாட்டின் நலனுக்கும் உகந்ததல்ல. தூசுகளோடும் பதிவேடுகளோடும் காலந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களை விடுவித்து மாணவர்களுடன் மட்டுமே அதிக நேரம் பயனுள்ள முறையில் செலவிட நல்வாய்ப்பை வழங்கினால் நிச்சயமாக ஒரு புதிய விடியல் இங்கு பிறக்கும்!
No comments:
Post a Comment