தொடுவுணர் வருகைப்பதிவில் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள்! - முனைவர் மணி கணேசன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 22, 2019

தொடுவுணர் வருகைப்பதிவில் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள்! - முனைவர் மணி கணேசன்

எதிர்வரும் 03.10.2019 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு முறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நடைமுறை ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கல்வித்துறையில் மேற்கொண்டிருக்கும் இந்த புதிய வருகைப்பதிவு நடைமுறைகள் பள்ளி மற்றும் சமுதாய அளவில் ஆசிரியர்கள்மீது உயர் மதிப்பைக் கூட்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில் இந்த உடனடி நடைமுறை ஆசிரிய, ஆசிரியைகளிடம் ஓரிரு நாட்களில் காணப்பட்ட ஒரு சில அசௌகரியம் காரணமாக எழுந்த எரிச்சல் முணுமுணுப்புகள் நாளடைவில் அவர்களின் விருப்பத்திற்குரிய தம் இன்றியமையாதக் கடமைகளுள் ஒன்றாக மாறிவிட்டதை மாவட்ட, மாநில அளவிலான இணையவழிப் பதிவுத் தொகுப்புகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும், ஆசிரியர்கள் எப்போதும் ஒரு புதிய மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ள தயங்கியதில்லை! ஏனெனில், மாற்றங்களை உருவாக்கும் வல்லமை கொண்ட தலைமைத்துவம் நிறைந்தவர்களாக ஆசிரியப் பெருமக்கள் இருப்பது சிறப்பு.
ஒரு பள்ளிக்கு நாடோறும் மாணவன் வருகைபுரிவது ஆசிரியருக்கு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஆசிரியர் தினசரி வருகைப் புரிவது மாணவனுக்கு மிக முக்கியம். தொடர் பயிற்சிகள், அடிக்கடி நடத்தப்படும் தலைமை ஆசிரியர்கள் கூட்டங்கள், இணையவழியிலான பதிவேற்றங்கள் மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்காமல் துரிதப்படுத்தும் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டி வெளிச்செல்லுதல், துறைசாராப் பிற பணிகளுக்கும் செல்ல அறிவுறுத்துதல் முதலான காரணங்களால் பள்ளிக்கு ஒழுங்காக வருகைபுரிந்து கற்பித்தல் பணியைச் செவ்வனே மேற்கொள்ள இயலாமல் தவிக்கும் ஆசிரியரின் ஓலக்குரல் இப்புதிய வருகைப்பதிவு முறைகளால் மாற்றம் அடையும் என்று நம்பப்படுகிறது.
சில தவிர்க்க முடியாதக் காரணங்களால் ஆசிரியரிடையே நிலவும் சீரற்ற வருகைகள் இதன் காரணமாகச் சீரடையும்! ஆசிரியரின் முழு வருகையால் மாணவர்கள் நலன் கூடும் என்பதில் ஐயமில்லை. மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மீதும் அரசுப்பள்ளிகள்மீதும் பொதுமக்களிடையே நிலவி வரும் தவறான கருத்துகள் மாற்றம் பெறும். எனினும், இப்புதிய மின்னணு வருகைப்பதிவு நடைமுறைகளில் மேலும் மெருகூட்ட வேண்டிய மாற்றங்கள் பல உள்ளன.
முதலாவதாக, இணைய இணைப்பினால் மட்டுமே தொடுவுணர் கருவி இயங்குவது எல்லா இடங்களுக்கும் பொருத்தமாக அமையாது. ஏனெனில், குக்கிராமங்களில் அமைந்துள்ள பல பள்ளிகளில் எந்தவொரு இணைய இணைப்பும் தங்கு தடையின்றிக் கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது. தவிர, இணைய இணைப்புப் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அதற்குரிய செலவினம் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்தும் இதுவரை தக்க பதிலில்லை.
இரண்டாவதாக, ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான விலையில்லாக் குறைந்த செயல்திறன் மிக்க மடிக்கணினியுடன் இணையத்தின் துணையுடன் தொடுவுணர் கருவிக்குத் தேவைப்படும் மென்பொருள்களைப் பதிவிறக்கி நிறுவினாலும் உடன் தொடுவுணர் கருவி மடிக்கணினியுடன் இணையாமல் அதிக நேரமெடுத்துக் கொள்வது ஒரு பெரிய குறையாகும்.
மூன்றாவதாக, தொடுவுணர் கருவியின் நேரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்திற்கேற்ப மாற்றி அமைத்தல் இன்றியமையாதது. தற்போது அலுவலக வேலை நேரத்திற்கேற்ப தொடுவுணர் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், காலை அலுவல் தொடங்கும் நேரத்தில் ஒருமுறையும் மாலை அலுவல் முடியும் நேரத்தில் மற்றொருமுறையும் மட்டுமே வருகைப்பதிவு மேற்கொண்டு வரும் நிலையுள்ளது. காலப்போக்கில் ஒருசிலர் இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வர். குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் நேரம், முற்பகல் சிறு இடைவேளைப் பொழுது, மதியம் பள்ளி தொடங்கும் வேளை, பள்ளி முடியும் நேரம் என நான்கு கால அளவுகளில் வருகைப்பதிவு மேற்கொள்வது சாலச்சிறந்தது. அப்போதுதான் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் முழுமையாக நிறைவுறும்.
நான்காவதாக, காலப்போக்கில் இத்தொடுவுணர் கருவி பழுதடைந்தாலோ, சேதமடைந்தாலோ அவற்றை மீளவும் பெற்று வழங்குவதும் வாங்க போதிய நிதியுதவி செய்வதும் அதைச் சரியான முறையில் இயங்கச் செய்வதும் அவசியமாகும். மேலும், இந்நடைமுறையினை அனைத்துத் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்துதல் நல்லது. பள்ளி பராமரிப்பு மானியம் மூலமாக இணைய இணைப்புக் கட்டணம், கருவி பழுதுபார்ப்பு மற்றும் புதிய கருவி வாங்குதல் போன்ற அடிப்படையானவற்றிற்கு செலவினங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படுதல் மிக அவசியம்.
ஐந்தாவதாக, தொடுவுணர் கருவியானது இணையக் கோளாறுகளால் தற்காலிகமாகச் செயலிழந்து போகும் சூழலில் தக்க பதிவேடுகள் மூலமாக ஆசிரியர் வருகையினைப் பதிவிட தக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். உரிய நேரத்தில் பள்ளி செல்ல ஏதுவாக, பொதுப் போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைக் கல்வித்துறை எடுக்க வேண்டியதும் தலையாயது. ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நடைமுறையில் உள்ள வட்டியில்லாத வாகனக் கடன் வசதிகளை மீண்டும் ஏற்படுத்தி உதவிடுதல் நல்லது. எளிதில் பள்ளி செல்ல முடியாத ஆசிரிய, ஆசிரியைகளின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக வருகைப்பதிவுக்கான முன், பின் நேரங்களில் மாற்றங்கள் கொணர்வது இன்றியமையாதது.
இறுதியாக, அலுவலக வேலையாக மாற்றுப்பணியில் செல்லுமிடங்களில் வருகைப்பதிவு இடுவதற்கு போதிய வாய்ப்பு வசதிகள் ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு முறையில் இருத்தல் அவசியம். இது பள்ளியைப் பார்வையிடச் செல்லும் அலுவலர்களுக்கும் பொருந்தும். இவ்வருகைப்பதிவினை அடிப்படையாகக் கொண்டே இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகளுக்குப் பரிசீலனை செய்ய வேண்டும். இத்தொடுவுணர் வருகைப்பதிவு என்பது ஆசிரியப் பெருமக்களுக்குக் கிடைத்த சாபமல்ல. வரம். இது நிச்சயம் சமுதாயத்தின் இதயம் தொடும். ஒவ்வொரு ஆசிரியரும் நெஞ்சுயர்த்திப் பெருமையும் பெருமிதமும் அடைய இது வழிவகுக்கும்.



No comments:

Post a Comment