வால்பாறையில் பட்டப்பகலில் பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்ற சிறுத்தை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 4, 2014

வால்பாறையில் பட்டப்பகலில் பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்ற சிறுத்தை

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 45 மாணவிகள் உள்பட மொத்தம் 80 பேர் படித்து வருகின்றனர். இதில் 36 பேர் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர்.
தேயிலை தோட்டத்துக்கு நடுவே உள்ள இந்த பள்ளியில் நேற்று மதியம் பள்ளி மாணவ மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். 5–ம் வகுப்பு மாணவமாணவிகள் காவியா, மித்ரா, நந்து, மங்கள் ஆகிய 4 பேர் சாப்பிட்ட பிறகு கைகழுவ சென்றனர்.
அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்றதை பார்த்து மாணவர்கள் 4 பேரும் கூச்சல் போட்டனர். அதை கேட்டு மற்ற மாணவர்களும் ஓடி வந்து சிறுத்தை வருவதை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறைக்குள் ஓடினார்கள்.
இதை அறிந்து பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் மற்றும் ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவ– மாணவிகளை வகுப்பறைக்குள் பாதுகாப்பாக இருக்க செய்தனர். மாணவ–மாணவிகள் மொத்தமாக கூச்சலிட்டதால் சிறுத்தை அருகிலிருந்த நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்ட பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் பள்ளிக் கதவை அடைத்து விட்டு, மானாம்பள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, தாசில்தார் நேரு, வார்டு கவுன்சிலர் நெல்லைசெல்வன் ஆகியோர் வனத்துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்டனர். ஆனால் அங்கு சிறுத்தையின் கால்தடம் ஏதும் இல்லை. ஆனாலும் அந்த பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியரிடம், வனச்சரக அலுவலர் அறிவொளி பள்ளி மாணவமாணவிகள் சத்துணவு சாப்பிட்டு விட்டு போட்ட முட்டை ஓடுகளின் வாசத்திற்கு சிறுத்தை வந்திருக்கலாம். எனவே இனிமேல் பள்ளி வளாகத்தை சுற்றி முட்டை ஓடுகளை போடுவதை நிறுத்திவிட்டு பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளி வளாகத்தை சுற்றி கம்பி வேலி இருந்ததால் சிறுத்தை பள்ளிக் கூடத்திற்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் போட்டு தரப்பட்டுள்ள கம்பி வேலியின் உயரத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment