குடோன்'களாக மாறும் பள்ளி வகுப்பறைகள்! தலைமையாசிரியர்கள் வருத்தம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 8, 2014

குடோன்'களாக மாறும் பள்ளி வகுப்பறைகள்! தலைமையாசிரியர்கள் வருத்தம்

நலத்திட்ட பொருட்களை, பள்ளிகளில், தொடர்ந்து தேக்கி வைப்பதால், வகுப்பறைகள் பயன்படாமல் இருப்பதாகவும், தங்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதாகவும், தலைமையாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில், வண்ண பென்சில், கிரையான், கணித உபகரணப்பெட்டி, லேப்-டாப், காலணி உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள், வினியோகிக்கப்பட்டு வருகிறது. புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் என தினமும் ஏதேனும் பொருட்கள், பள்ளிகளில் வந்த வண்ணம் உள்ளது.மாணவர்களுக்கு வழங்கவேண்டிய பொருட்கள், பெரும்பாலான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், வைக்கப்பட்டுள்ளன. இதனால், சில பள்ளிகளில் வகுப்பறைகள், மாணவர்களுக்கு பயன்படாமல்
முடக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் வேண்டுகோளை மறுக்க இயலாமல், தலைமையாசிரியர்கள் அனுமதி வழங்குகின்றனர்.
நலத்திட்ட பொருட்கள் வினியோகத்தால், கல்வித்தரத்திலும், மாணவர்கள் சேர்க்கையிலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளை, குடோன்களாக பயன்படுத்தி வருகின்றனர்.ஒண்டிப்புதுார் பகுதியிலுள்ள, பாடநுால் கழகத்தால், புத்தகங்கள், நோட்டுகள் வினியோகம் நடந்து வந்தது. தற்போது, நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் பொறுப்பில் அனுப்பப்படுவதால், கல்வித்துறை அதிகாரிகள் வேறு வழியின்றி பள்ளிகளில் தேக்கிவைக்கின்றனர்.இதுபோன்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும்,550 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும், நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை பள்ளிகளில் வைப்பதால், முறைகேடாக பயன்படுத்தவும், பொருட்கள் காணாமல் போவதற்கும், அதிக வாய்ப்புகள் உள்ளன.
பாதுகாப்பற்ற சூழலில், பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும், காணாமல் போனாலும், கல்வி அதிகாரிகளும், பள்ளி தலைமையாசிரியர்களும் தலைமை அதிகாரிகளுக்கு பதில் கூறுவதுடன், நீதிமன்றங்களுக்கு அலையும், அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில்,'நலத்திட்ட பொருட்களை குவித்து வைப்பதால், வகுப்பறைகள் பயன்படுத்த இயலாத சூழல் உள்ளது. மேலும், தினமும் பாடம் நடத்த இயலாமல், பொருட்கள் வைத்திருக்கும் இடங்களுக்கு யார் வருகின்றனர் என்பதை, கவனிப்பதே பெரிய வேலையாக உள்ளது. பல கோடி மதிப்புள்ள பொருட்களை அனுப்பும் அரசு, பாதுகாப்பாக வைக்க குடோனை அமைத்துக்கொடுக்கவேண்டும். மேலும், பொருட்களை ஏற்றி இறக்கும் வேலைகளை ஆசிரியர்கள் செய்யவேண்டிய அவலநிலையில் உள்ளோம். பள்ளிகளை குடோன்களாக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல' என்றார்.

No comments:

Post a Comment