ஆசிரியர் தொழில் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 8, 2014

ஆசிரியர் தொழில்

மனித சமுதாயத்தில் ஆற்றப்படுகின்ற பயனுள்ள பணிகளுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இருக்க முடியாது. அவை யாவும் கௌரவத்துக்குரியவையே. ஆனால் சகல தொழில்களும் வாண்மை நிறைந்த தொழில்களாகி விட மாட்டாது. எனவே வாண்மை நிறைந்த தொழில்கள் என்றால் என்ன எனும் வினா மிக இயல்பாகவே எழுகிறது. ஒரு வாண்மைத் தொழில் பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.
சமூக பயன்பாடு, சமூக இயக்கத்துக்கு தொழில் மிகவும் அவசியமானது.
அத்தொழில் பற்றிய பரந்த அறிவுத்தொகுதி 
தொழில் தொடர்பான ஒழுக்கக் கோவை
தொழிலுக்குரிய வாண்மைசார் அமைப்பு
தொழில் புரிவோர் அர்ப்பணிப்பும் பொறுப்பும் கடமையும் வகை கூறலும் கொண்டிருத்தல்
தொழில் புரிவோர் தமது தொழில் சார் அறிவை இற்றைப்படுத்திக் கொள்ளல்
தொழில் புரிவோர் தமக்குள் தொழில் சார் ஒற்றுமை மற்றும் தோழமை பூண்டிருத்தல்
தொழில் தொடர்பான தீர்மானங்களை சுதந்திரமாக மேற்கொள்ளல்.
வாண்மைத்துவம் தொடர்பாக இருக்கக் கூடிய நியமங்களில் மேற்குறித்தவை முக்கியமானவை

தொழிவாண்மை விருத்தி என்பது இன்று சமகால தொழில் முறைமையில் பிரதானமானதும் விளைப்பாடுமிக்கதுமான விடயமாகவே நோக்கப்படுகிறது. இன்று ஆசிரியராக விளங்குவதோடு ஆசிரியருக்கான பயிற்சி என்பது அடிப்படை தேவைப்பாடாக விளங்குகிறது. இதற்கென முறைசார், முறைசாரா அமைப்புகளில் பல்வேறு பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் பணி ஒரு சேவையாகவும் அதே சமயம் ஒரு தொழிலாகவும் கருதப்பட வேண்டும் என யுனெஸ்கோவின் ஆசிரியர் உடன்படிக்கை குறிப்பிடுகிறது. ஆசிரியர் பணியினை ஒரு தொழிலாகவும் சேவையாகவும் கைகொள்ள வேண்டுமாயின்,
இடையறாது மேற்கொள்ளும் ஆற்றல்
பேணப்படும் விசேட ஞானம்
விசேட திறமைகள்
என்பன ஆசிரியருக்கு அவசியம்.'

யுனெஸ்கோ ஆசிரியர் உடன்படிக்கை மூலம் ஆசிரியர் சாசனம் தயாரிக்கப்படுகையில் ஆசிரியர் தொழில்வாண்மையானது ஆசிரியர்களால் பெறப்பட வேண்டிய ஒரு தன்மை என 146 சரத்துகளாலான அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரை 4 வகையாக பிரிக்கலாம்
தொழில்வாண்மை மட்டத்தினை அண்மித்தோர்.
சாதாரண திறமைகளை உடையோர்
உதவிகள்,ஆலோசனைகள்,வழிகாட்டல்கள் என்பன அதிகளவு அவசியமானோர்.
கடுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டியோர்.
தொழில்வாண்மையை அடைய வேண்டுமாயின் தற்போது ஆசிரியர் சேவையில் நிலவும் நல்ல தன்மைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் நிலவும் நலிவுகளை பாரியளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

01. தொழில் வாண்மை தொடர்பான தேர்ச்சிகள்
ஆசிரியர் தொழிலானது மிகுந்த பொறுப்பு வாய்ந்த பணியெனக் கல்விச் சேவை ஆணைக்குழு குறிப்பிடுகிறது.பொதுவாக ஒரு தொழிலோடு சம்பந்தப்பட்ட உயர்ந்த நிலைமையை அடைவதற்காக 3 விதமான தகைமைகள் அவசியமாகின்றன.
அ. கல்வித் தகைமைகள்
சா.தரம்,உயர் தரம்,பட்டம்,பட்டப் பின் பாட நெறி
ஆ.தொழிற்றகைமைகள்
பயிற்சி, டிப்ளோமா என்பன
இ. விஷேடத்துவங்கள்
கண்டுபிடிப்புக்கள்,ஆய்வுகள்,வெளியீடுகள் என்பன
02. மேற்படி விஷேட தேர்ச்சிகளை பெற்றுக்கொள்கையில் வைத்தியத்துறை போன்ற வேறு துறைகளில் ஏற்கப்பட்ட குறிப்பிட்ட சில நிலைபாடுகள் உண்டு.அத்தகைய நிலைபாடுகள் ஆசிரியர் பணியில் இதுவரை கட்டியெழுப்பப்படவில்லை.
(உ.ம்) பொறியியல் சேவை,வைத்திய சேவை போன்றவை தொடர்பாக பல்வேறு தகவல்கள் நிமித்தம் பெற்றுக்கொள்ள வேண்டிய விசேட தேர்ச்சிகள் பற்றிய எழுத்து மூலமான அங்கீகாரங்கள் உண்டு.அவ்வாறான விஷேடத்துவங்கள் தொடர்பான ஓர் அங்கீகாரம் ஆசிரியர் சேவையில் கிடையாது.
03. பொறியியல் சேவையை பொறுத்த வரையில் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் விதம்,அதன் விஞ்ஞான ரீதியான அடித்தளம் என்பனவற்றை நிச்சயமாகவே ஆய்வு கூடமொன்றில் பரீட்சித்து பார்க்க முடியும்.அது தொடர்பான பயிற்சியினையும் பெற இயலும்.ஒரு வைத்தியராக முன்னர் நோய்க்கான காரணங்களை ஆய்ந்தறிதல்,உபகரணங்களைக் கையாளும் விதம்,சத்திர சிகிச்சை செய்யும் விதம் என்பன தொடர்பான சரியான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற விதத்திற்கேற்பவே சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் சேவை பயிற்சி இதனை விட வேறுபட்டதாகும். கற்ற விடயத்துக்கும் செய்முறையாக ஆற்றும் விடயத்துக்கும் இடையே சிந்தையில் கொள்ள வேண்டியனவோ ஏராளம். பரீட்சார்த்தங்களில் ஈடுபட நேரிடுவதுண்டு. ஓர் ஆய்வு கூடத்தில் பெறும் நிபுணத்துவத்தை ஆசிரியரொருவரால் பெறவியலாது.
04. ஏனைய சாதாரண தொழில்வாண்மையாளர்கள் போலன்றி ஆசிரியர்கள் பிள்ளைகளோடு பணிபுரிகிறார்கள். பிள்ளைகளோ விரைவாக திருப்தியடையக்கூடியவர்கள், வேறுபாடுகளுக்கு ஆளாகக்கூடியவர்கள், வெறுப்படையக் கூடியவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், குறைந்த அனுபவங்களை உடையவர்கள், எண்ணக்கருக்களை ஆட்படுத்திக் கொள்வதில் பல்வேறு மட்டங்களை; அபிவிருத்திப் பருவங்களை வெவ்வேறு விதத்தத்தில் கடக்கும் முதிர்ச்சியடையாத கூட்டத்தாராவர். முன்கூட்டியே மேற்கொள்ளும் தீர்மானத்தோடு மாத்திரம் ஆசிரியரால் செயற்பட முடியாது.எனவே கற்பிப்பவராகவும், உளவியலாளராகவும் அவர் செயற்பட நேரிடுகிறது.
05. ஆசிரியரது பணி பிள்ளையின் உளச்செயற்பாட்டுடன் தொடர்புறுகிறது.அவர் பெற்றார் போன்று பிள்ளைகளைக் காப்பவர் என்ற அர்த்தத்தோடுகுறிப்பிடப்படுகிறார். ஆசிரியர் பாடசாலையில் தந்தையாக அல்லது தாயாகச் செயற்பட நேரிடுவதுண்டு.
வகுப்பில் நாற்பது பேருக்கு தாயாகும் போது முகங்கொடுக்கும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளில் உளத்தாக்கம் ஏற்படாத விதத்தில் செயற்படல் ஆசிரியரது பணியாகும். உளவியல் சார்ந்த இந்த அடித்தளம் வேறு எந்தவொரு தொழிலிலும்; அவ்வளவு செல்வாக்கு செலுத்துவதில்லை. ஆசிரியரது தொழில்வாண்மைக்குரிய விசேடமான தரக்கட்டுப்பாடுகள், நல்லொழுக்கங்கள் என்பன வற்றை எதிர்காலத்தில் நாம் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும். அதனை எம் சிந்தையில் கொண்டு அதனை ஈட்டிக்கொள்ள முனைதல் வேண்டும்.
பர்க் குறிப்பிடும் தொழில் தேர்ச்சிகள்
குறிப்பிட்ட ஒரு தொழிலுக்காக பின்வரும் தேர்ச்சிகள் அவசியமாகின்றன
தம் பணியில் விஷேடத்துவம்
தம் பொறுப்பான பணிக்கு பொருத்தமான நுட்ப முறைகளையும் தொழில்நுட்பத்தையும் அறிந்திருத்தல்
ஒழுக்கக் கோவைக்கான நடத்தை சார் அமைப்பு காணப்படல்.அங்கு அனைவருக்கும் பொதுவான ஒரு கோட்பாடு தென்படல்
தொழில் சார் குழுக்களின் ஒத்துழைப்புடன் செயற்படல்.
இதன் பிரகாரம் ஆசிரியர் தொழில் வாண்மையில் பிரவேசித்தல் அவசியம்.ஆசிரியர் தொழிலை தெரிவு செய்யும் ஒருவர் அவ்விதம் முனைந்து தொழில்வாண்மையை அடைந்து கொள்ளலாம். இதன் மூலம் இலங்கையின் ஆசிரியர் தொழில் வாண்மை பொருந்தியதாக அமையும்.

எஸ்.ஏ.ஜீ. பாத்திமா ஸகிய்யா
கல்வி பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment