சமையல் காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை; ஆனால் கண்டிப்பாக வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் நேற்று கூறியதாவது:சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் எந்த வகையான குழப்பமும் தேவையில்லை.சமையல் காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை. ஆதார் இல்லாவிட்டாலும் மானியம் பெறலாம். ஆனால் சமையல் காஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.நேரடி மானிய திட்டம் துவங்கியதும் முதல் சிலிண்டரை வாங்குவதற்கு முன் சந்தை விலையில் சிலிண்டரை வாங்குவதற்காக வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் முன் தொகை (ஒரு தடவை மட்டும்) செலுத்தப்படும். இதன் பின் ஒவ்வொரு சிலிண்டர் வாங்கும் போதும் மானிய தொகை தனியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் அந்த திட்டம் துவங்கியதிலிருந்து மானிய தொகை பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்படும். இந்த மூன்று மாதங்களுக்குள் நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்கள் வழக்கம்போல் மானிய விலையில் ஏஜன்சிகளிடமிருந்து சிலிண்டர்களை பெறலாம்.இந்த மூன்று மாதங்களுக்கு பின்னும் நேரடி மானிய திட்டத்தில் சேரவில்லை என்றாலும் பிரச்னையில்லை. இது போன்ற வாடிக்கையாளர்களுக்கு மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் இவர்கள் சந்தை விலைக்கே சிலிண்டர்களை பெற முடியும்.இவர்களின் மானிய தொகை தனியாக ஒதுக்கி வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்ததும் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
இந்த கூடுதல் மூன்று மாத அவகாசத்திலும் நேரடி மானிய திட்டத்தில் சேரவில்லை எனில் இந்த குறிப்பிட்ட காலத்துக்கான மானியம் காலாவதியாகி விடும். இந்த தொகையை வாடிக்கையாளர்கள் பெற முடியாது.இதற்கு பின் நேரடி மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கும் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியத்தை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
*நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15 முதல் சமையல் காஸ் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
*நேரடி மானிய திட்டத்தை பெறுவதற்காக நாடு முழுவதும் 333 வங்கிகளில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*நாடு முழுவதும் இதுவரை 10 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் எண் வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
*இதுவரை நாடு முழுவதும் 72 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
*உ.பி., பீகார், உத்தரகண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து இதுவரை 10 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை 34 கோடி.
No comments:
Post a Comment