கல்லுாரி மாணவர்களிடம், தமிழில் கடிதம் எழுதும் ஆற்றல் இல்லாதது, இலக்கிய திருவிழாவில் வெளிப்பட்டது.
அண்ணா ஆதர்ஸ் மகளிர் கல்லுாரியில், புத்தக சங்கம் சார்பில், இலக்கிய திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், "நீ, டில்லியில் இருக்கும் உன் நண்பன் வீட்டிற்கு சென்று, ஒரு
மாதம் தங்கி விட்டு, திரும்பி இருக்கிறாய். இப்போது, உன் உணர்வுகளை, உன் நண்பனுக்கு கடிதமாக எழுது" என, விழா ஏற்பாட்டாளர்கள் கூறி, வெள்ளை தாள்களை வினியோகித்தனர்.
உடனே, கடிதம் எழுத ஆர்வமாக தாள்களை வாங்கிய மாணவர்கள், நண்பனுக்கு, எப்படி எழுதுவது என தெரியாமல், ஏதோதோ எழுதி எழுதி, பேப்பரை கசக்கி, கிழித்து விட்டு, ஹாய்... நலமா? என்கிற ரீதியில், சில வரிகளை மட்டும் எழுதினர். பலர், ஒன்றுமே எழுதாமல் திருப்பிக் கொடுத்தனர்.
மாணவர்கள் சிலர் கூறுகையில், "1990ம் ஆண்டுக்கு பின் பிறந்த எங்களுக்கு, கடிதத்தின் அவசியமோ, அது கொடுக்கும் உணர்வு ரீதியான பாதிப்புகளோ, அதன் இலக்கிய சுவையோ தெரியாது; நாங்கள், தகவல் தொடர்பின் உச்சத்தில் இருப்பதால், அடுத்தடுத்த நொடிகளில், எங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுகிறது.
ஆனாலும், உணர்வுகளை கடிதம் மூலம் அனுப்பிவிட்டு, ஒரு வாரம் காத்திருந்து பதில் தெரிந்து கொள்வதில் இருக்கும் சுகமே தனிதான்.
காத்திருத்தலின் சுகமும், அது தரும் சுவையும்தான், இலக்கியம் என்பதை புரிந்து கொண்டோம்" என்றனர். அந்த விழாவில், புத்தக மதிப்புரை, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள் நடந்தன.
No comments:
Post a Comment