அங்கன்வாடியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, தெளிவான நடைமுறையை பின்பற்றாததால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், கடந்த 13 நாட்களாக குழப்பம் நீடித்து வருகிறது.
குறுமைய பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்காமல், ராஜினாமா செய்யும்படி அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக நலத் துறையின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 2,155 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 196 குறு மையங்களும் உள்ளன.
இவற்றில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, கடந்த செப்டம்பர்
மாதம் மாவட்ட ஆட்சியரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் காலியாக உள்ள, 371 முதன்மை மைய பணியாளர்கள்; 20 குறு மைய பணியாளர்கள்; 353 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப, நேரடி நியமனத்தின் மூலம் பணியாளர்களை தேர்வுசெய்ய, கடந்த அக்டோபர் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றில், 371 அங்கன்வாடி முதன்மை மைய பணியிடங்களுக்கு, 3,129 நபர்களும்; 20 அங்கன்வாடி குறு மைய பணியிடங்களுக்கு 76 நபர்களும்; 353 உதவியாளர் பணியிடங்களுக்கு 1,556 நபர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த மாதம் 10, 11, மற்றும் 12 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்றது.
371 அங்கன்வாடி முதன்மை மையங்களுக்கு, ஏற்கனவே குறு மையங்களில் பணிபுரியும் 170 பணியாளர்களிடமிருந்து, துறை ரீதியாக முன்னுரிமை அளிக்கும் வகையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களில் தகுதியுடைய 140 நபர்களுக்கு, கடந்த 19ம் தேதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நெருக்குதல்: மீதம் உள்ள முதன்மை மைய பணியாளர் பணியிடங்களுக்கு மட்டும் புதிய விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 231 நபர்களும்; அங்கன்வாடி குறு மைய பணியிடங்களுக்கு 20 நபர்களும்; 353 உதவியாளர்களும் பணியில் சேர்ந்து விட்டனர். ஆனால், முதன்மை மைய பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட குறு மைய பணியாளர்கள், 140 நபர்கள், நேற்று வரை பணியில் சேரவில்லை. இந்த பணியாளர்களின் முந்தைய பணிக் காலத்தை கணக்கில் கொள்ள முடியாது.
தற்போதைய பணியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய பணியில் சேரும்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குறு மைய பணியாளர்கள், நேற்று வரை தங்கள் பணியை ராஜினாமா செய்யாமலும், புதிய வேலையில் சேராமலும் உள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டுவிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், குறு மையங்களில் 140 பணியிடங்கள் புதிதாக காலியாகும் நிலை உருவாகி உள்ளது. அதிகாரிகளின் குளறுபடியால், அங்கன்வாடி பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் குளறுபடி
இதுகுறித்து சமூக நலத் துறையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அலுவலர்கள் கூறுகையில், "குறு மையங்களில் பணிபுரிந்தவர்களுக்கு துறைரீதியாக முன்னுரிமை அளிக்க முடிவெடுத்து, முதன்மை மையங்களில் அவர்களை முதலில் நியமித்திருக்க வேண்டும். அதன் பின்னர், ஒட்டுமொத்த காலி பணியிடங்களை அறிவிக்க வேண்டும். அதை விடுத்து, தற்போது காலி பணியிடங்கள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணியிடங்களை நிரப்புவதில் தெளிவான நடைமுறைகளை பின்பற்றாததால், தேர்வு செய்யப்பட்டு 13 நாட்களாகியும் குழப்பம் நீடிக்கிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்" என்றார்.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவரை கேட்டபோது, "குறு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு, அருகில் உள்ள மைய பணியாளர் பொறுப்பு வகிப்பார்கள். குறு மையத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் இரண்டு நாட்களில் பணியில் சேர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்
No comments:
Post a Comment