30 சதவீத விலையில் மருந்துகள் விற்க 3 ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள் ஜூன் மாதம் திறப்பு: மத்திய மந்திரி தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 27, 2015

30 சதவீத விலையில் மருந்துகள் விற்க 3 ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள் ஜூன் மாதம் திறப்பு: மத்திய மந்திரி தகவல்


வெளிச்சந்தை விற்பனை விலையில் இருந்து சுமார் 70 சதவீதம் விலை குறைப்புடன் ஏழை, எளிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறைக்கான இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார். 

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:- ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், வெளிச்சந்தை விலையை வைத்து ஒப்பிட்டுப்பார்க்கையில் 20-30 சதவீத விலையில் மருந்து, மாத்திரைகளை விற்கும் ’ஜன் ஔஷாதி’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. 

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் , வட்டார அளவிலான சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் இனம் சார்ந்த பொது மருந்துகளை (ஜெனரிக் ட்ரக்ஸ்) விற்பனை விலையில் 20-30 சதவீத விலைக்கு (100 ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் வெறும் 20-30 ரூபாய் விலையில் கிடைக்கும்) விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த திட்டத்தின் முதல்கட்டமாக நாடு முழுவதும் 3 ஆயிரம் ’ஜன் ஔஷாதி’ மருந்துக்கடைகள் தொடங்கப்படும். படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்து, வரும் 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த மலிவு விலை மருந்தகங்களை தொடங்குவதற்கு மருந்தாளுனர் பட்டயம், பட்டம் மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கும், நல்ல பின்னணி கொண்ட அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இந்த கடைகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் ’ஷோ-கேஸ்’ வாங்குவதற்கு ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில் இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment