நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஒரு வாரம் மட்டுமே அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 23, 2015

நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஒரு வாரம் மட்டுமே அவகாசம்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்கள் இன்னும் ஒரு வார கால (மார்ச் 31 வரை) அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1.32 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
எனவே, அவர்களையும் இணைக்க தற்போது எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள்
மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கெடுவுக்குள் மானியத் திட்டத்தில் இணைபவர்களுக்கு முன்வைப்புத் தொகை ரூ.568-ம், அந்தந்த மாதத்துக்கான மானியத் தொகையும் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே படிவம்: ஆதார் அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள், மானியம் பெற விரும்பாதவர்கள் என அனைவரும் ஒரே விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் நேரடி மானியம் பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆதார் கட்டாயமில்லை: ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிய படிவத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி சி-ஐ பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் அட்டை உள்ளவர்கள் புதிய படிவத்தை இரண்டு நகல்கள் எடுத்து, ஒரு நகலில் பகுதி ஏ, பகுதி பி-ஐ பூர்த்தி செய்து, மற்றொரு நகலில், பகுதி ஏ, பி, சி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து இரண்டு படிவங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்கலாம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
விவரங்கள் அறிய தனி இணையதளம்...
அனைத்து எரிவாயு நிறுவன வாடிக்கையாளர்களும் நேரடி மானியத் திட்ட விவரங்கள், புதிய விண்ணப்பப் படிவம், 17 இலக்க குறியீட்டு எண் ஆகிய வற்றை www.mylpg.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 இணையத் தயங்கும் போலிகள்?
 நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்காகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்காகவும் வங்கிகள், எரிவாயு விநியோக மையங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாள்தோறும் கூட்டம் அலைமோதியது. நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பதைக் கண்டறிய முடியும் என்பதால் ஒரே முகவரியில் இரண்டு இணைப்புகளை வைத்துள்ளவர்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையாமல் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாகவும், தற்போது பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாலும் கூட்டம் குறைவாக காணப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 1.ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளை தொகை ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுத்தால் போதுமானது.
2.ஆதார் அட்டை உள்ளவர்கள் எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவரது ஆதார் அட்டையின் நகல், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஐஊநஇ இர்க்ங் சர். உள்ளது) ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment