அரசு பள்ளியில் பேய்: வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 17, 2015

அரசு பள்ளியில் பேய்: வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள்!

சேலம்: தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவ–மாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவதால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலுமிச்சைப்பழத்தை மாணவர்கள் எடுத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஒரு ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ–மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குபடி கூறி இருக்கிறார். அதன்படி, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கூறி இருக்கிறார்கள். மாணவ–மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர்.

இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர்களில், அரவிந்த், தமிழ்செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரியர்கள், அந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க சொல்லி இருக்கின்றனர். இந்த செய்தி அந்த கிராமத்தில் காட்டுத் தீ போல் பரவியது. இதில் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ''வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால், அவர்களை மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக தற்போது புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள்" என்றார்.

இந்த சம்பவம் குறித்து சில பெற்றோர்கள் கூறும்போது, ''கடந்த சில நாட்களாகவே இந்த பள்ளிக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் வகுப்பறையில் திடீர் திடீரென மயங்கி விழுந்து உடம்பை முறுக்குகின்றனர். வகுப்பறையை விட்டு வெளியே வந்தவுடன் சரியாகி விடுகிறார்கள். மேலும், இந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக கூறுகின்றனர். அதனால், நாங்கள் கோவிலில் மந்திரித்த வேப்பிலை, எலுமிச்சைப் பழத்தை குழந்தைகளின் புத்தகப்பையில் போட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்" என்றனர்.

மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் திடீர் திடீரென மயங்கி விழுவதும், வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும் இயல்பு நிலைக்கு வந்துவிடுவதும் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment