அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 27, 2015

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால், இந்த மாதத்தின் இறுதி நாளான 31-ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது எனவும், அதற்குப் பதிலாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் கருவூல கணக்குத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன காரணம்? நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, நிதியாண்டு தொடங்கும் தினமான ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையாகும். இந்த விடுமுறையைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அரசு விடுமுறைகள் வருகின்றன. ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியும், ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளியும் வருகின்றன. இரண்டு தினங்களும் அரசு விடுமுறையாகும். இந்த இரு தினங்களிலும் வங்கிகள் செயல்படாது.
சனிக்கிழமை (ஏப்ரல் 4) வங்கிகள் செயல்படும் என்றாலும், ஊதியப் பட்டியலை வங்கிகளுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடும் மாநில அரசின் கருவூலத் துறையானது செயல்படாது. இதனால், அன்றைய தினமும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரவு வைப்பது சிரமம். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வழக்கம் போல், அரசு விடுமுறை என்பதால், ஏப்ரல் 6- ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment